ஏற்றுமதி வருமானத்தை மேம்படுத்த நடவடிக்கை – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க! samugammedia

இரத்தினக்கல் மற்றும் ஆபரண தொழில் சார் ஏற்றுமதி மற்றும் மீள் ஏற்றுமதியை மேம்படுத்துவதன் மூலம் வருடாந்தம் அதிக ஏற்றுமதி வருமானத்தை ஈட்ட முடியும் என்பதால், அந்த இலக்கை அடைவதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் மற்றும் திட்டங்களை உடனடியாக சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.

இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் தொழில் துறை தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி அலுவலகத்தில் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறையின் அபிவிருத்திக்கான வரிக் கொள்கைகள் தொடர்பான பரிந்துரைகளும் “சூழல், இயற்கை வளங்கள் மற்றும் நிலையான அபிவிருத்திக்கான துறைசார் கண்காணிப்புக் குழு” வினால் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறையை பாதிக்கும் வரிகள் மற்றும் ஏற்றுமதி, மீள்ஏற்றுமதி செயன்முறைகள் தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், இத்துறையில் இதுவரை ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பிலும் உரிய தரப்பினர் ஜனாதிபதியிடம் தகவல்களை முன்வைத்தனர்.

இலங்கையின் இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறையின் வருமானம் கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இவ்வருடம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடையவில்லை என்றும், வருடாந்தம் குறைந்தது 2 பில்லியன் அமெரிக்க டொலர்களை இலக்காகக் கொள்ள திட்டமிடப்பட்ட வேலைத்திட்டம் ஒன்று அமுல்படுத்தப்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

இலங்கையில் இரத்தினக்கல் மற்றும் ஆபரண தொழிலை மேம்படுத்துவதற்கான முறையான வேலைத்திட்டம் உடனடியாக முன்வைக்கப்பட்டால் தேவையான வசதிகளை வழங்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் குறிப்பிட்டார்.

மேலும் முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பொருளாதார விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்க மற்றும் சூழல், இயற்கை வளங்கள் மற்றும் நிலையான அபிவிருத்திக்கான துறைசார் கண்காணிப்புக் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும உள்ளிட்ட குழு உறுப்பினர்கள் உட்பட துறைசார் நிறுவனங்களின் தலைவர்களும் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *