அக்கராயன் ஆற்றுப் பகுதியில் அள்ளப்படும் மண்ணை அதே பகுதியில் பயன்படுத்த மக்கள் கோரிக்கை!

கிளிநொச்சி- அக்கராயன் ஆற்றுப்பகுதியில் அள்ளப்படும் மணல் அப்பிரதேசத்தின் அபிவிருத்திக்கு பயன்படுத்தப்பட வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட அக்கராயன் பிரதேசத்தில் உள்ள அக்கராயன் குளத்தின் கீழ் உள்ளதாக குறித்த ஆறு அரசாங்கத்தின் சுபீட்சத்தை நோக்கி எனும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் புனரமைப்பு செய்வதற்கான பணிகள் கடந்த மாதம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

ஆற்றின் அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் பெருந்தொகையான மணல் அள்ளப்பட்டு குறித்த பகுதியில் குவிக்கப்பட்டுள்ளது.

அங்கு அள்ளப்படும் மண்ணினை அரசியல் செல்வாக்குடன் வெளி இடங்களிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மக்கள் தகவல் அறிந்துள்ளனர்.

இந்த நிலையில் குறித்த பகுதியில் காணப்படும் தமது வளத்தினை பாதுகாத்துத் தருமாறு கோரி கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் அப்பகுதியில் கூடியிருந்தனர்.

இதேவேளை குறித்த மக்களுடன் மக்கள் பிரதிநிதிகளும் சென்றிருந்ததுடன், குறித்த அபிவிருத்தி பணிகள் தொடர்பில் பார்வையிட்டிருந்தனர்.

பெருமளவிலான மணல் அப்பகுதியில் குவிக்கபட்டுள்ளதை அவதானிக்க முடிந்தது.

குறித்த மணலினை கிளிநொச்சி மாவட்டத்திற்குள்ளேயே குறைந்த விலையில் மக்களிற்கு தேவையான மணலை வழங்குவதற்கும், அதனால் கிடைக்கப்பெறும் நிதியிலிருந்து அப்பிரதேசத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையிலும் நடவடிக்கை எடுக்க வே்ணடும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில், அண்மையில் மாவட்ட செயலகத்தில் சுற்றாடல் தொடர்பிலான இடம்பெற்ற கலந்துரையாடலின்போது குறித்த மணலினை கரைச்சி பிரதேச சபை ஊடாக விற்பனை செய்து அப்பகுதி மக்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு உறுதுணையாக அமையும் என தீர்மானம் எடுக்கப்பட்டிருந்ததாகவும், பின்னர் அரசியல் செல்வாக்குடன் சிலர் குறித்த மணலை வியாபார நோக்குடன் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் தெரிவித்தார்.

பல ஆண்டுகளாக குறித்த மணலை அப்பகுதி மக்கள் சூரையாடாது பாதுகாத்து வந்துள்ள நிலையில், குறித்த மண்ணை முறையாக விற்பனை செய்து அப்பகுதி மக்களிற்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி கொடுப்பதே பொருத்தமானது என கிளிநொச்சி மாவட்ட பிரஜைகள் குழு செயலாளர் சிங்கராசா ஸீவநாயகம் தெரிவித்துள்ளார்.

குறித்த மணரை அரசியல் தலையீடு இன்றி அப்பகுதி மக்களின் கரங்களிற்கே கிடைக்க வேண்டும் என கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் ஜீவராசா தெரிவித்துள்ளார்.

மரங்களை நாட்டுமாறு தெரிவித்து ஜனாதிபதியினால் வேலைத்திட்டம் தேசிய ரீதியில் முன்னெடுக்கப்படும் நிலையில், இப்பகுதியில் இடம்பெற்று வரும் அபிவிருத்தியினால் பல மரங்கள் அழிவடையும் நிலை காணப்படுவதாகவும், இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அருட் தந்தை குறிபிட்டார்.

அபிவிருத்தி பணி இடம்பெற்ற வரும் பகுதியில் மண்ணரிப்புக்குள்ளான மரங்கள் சரிந்து விழும் அபாய நிலையில் காணப்படுகின்றமையையும் அவதானிக்க முடிந்தது.

இதேவேளை, அங்குள்ள மண் சூரையாடப்படாத வகையில் இன்று இரவு முதல் மணல் கடத்தலிலிருந்து பாதுகாக்கும் வகையில் கரைச்சி பிரதேச சபையினால் காவல் கடமையில் ஊழியர்கள் நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *