மக்களுடைய காணிகள் திட்டமிட்டு அபகரிக்கின்ற சூழ்நிலையில் விடுவிப்பு என்பது நல்ல விடயம்- செல்வம் எம்பி! samugammedia

மக்களுடைய காணிகள் திட்டமிட்டு அபகரிக்கின்ற சூழ்நிலையிலே விடுவிப்பு என்பது நல்ல விடயமாக பார்க்க கூடியதாக இருக்கின்றது.

இது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள தமிழ் மக்களின் காணி பிரச்சினைகள் தொடர்பில் விஷேட கலந்துரையாடல் ஒன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இன்று (16) இடம்பெற்றிருந்தது. கூட்டத்தின் முடிவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இன்று முல்லைத்தீவிலே காணி விடுவிப்பு சம்மந்தமான கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது. ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதத்தின் முடிவிலே இடம்பெறும் பிரச்சினைகளை அனுப்ப வேண்டிய தேவை இருக்கின்றபடியால் இன்றைய கூட்டம் இடம்பெற்றிருந்தது. 

வனஇலாகா பொறுப்பதிகாரிகள் இங்கே அழைக்கப்பட்டிருந்தார்கள். அந்த அடிப்படையில் மாவட்ட செயலகம் கொடுத்த பல இடங்களில் தற்போது சில இடங்கள் விடுவிக்கின்ற முடிவை எட்டியிருக்கின்றன.

அதேபோல் விடுவிக்கப்பட வேண்டிய காணிகளாக இருந்தாலும் இங்கு இருக்கின்ற அதிகாரிகளினால் இயலாத ஒரு நிலை ஏற்படுகின்ற போது அதனை நடுவர் குழுவிற்கு அனுப்புவதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.

எங்களை பொறுத்தமட்டில் இந்த விடயங்கள் நடைமுறைக்கு வர வேண்டும் என்பதனை பெரிதாக எதிர்பார்க்கின்றோம். ஏனென்றால் இது மக்களுடைய காணிகள் ஏற்கனவே திட்டமிட்டு அபகரிக்கின்ற நிலைகள் இருந்து கொண்டிருக்கின்ற சூழ்நிலையிலே விடுவிப்பு என்பது உண்மையிலே நல்ல விடயமாக பார்க்க கூடியதாக இருக்கின்றது. இது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் .

கூட்டம் போட்டு பேசி முடிவுகளை எடுத்ததன் பின் மீண்டும் அந்த மக்கள் அங்கே செல்கின்ற போது கைது செய்து நீதிமன்றத்திற்கு அனுப்புகின்ற செயற்பாடுகள் இருக்க கூடாது என்பது எங்களுடைய எண்ணமாக இருக்கின்றது.

அந்தவகையிலே எடுக்கப்பட்ட தீர்மானங்கள் உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்ற விடயத்தை நாங்கள் கோரியிருக்கின்றோம். பல விடயங்களை ஆராய்ந்து உடனுக்குடன் தீர்வுகளை கண்டிருக்கின்றோம். அது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *