
யாழ் மாவட்ட கடற்தொழிலாளர்களுக்கான ஆழ்கடல் மீன்பிடி படகுகளை ஆழ்கடல் மீன்பிடி படகுகளை அதிகரிக்குமாறு வடக்கு மாகாண ஆளுநரிடம் கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
குறித்த கோரிக்கையை ஊர்காவற்துறை கடற்தொழில் சார்பாக, யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னராசா முன்வைத்துள்ளார்.
யாழ் மாவட்ட கடற்தொழில் சமசங்கள், கடற்தொழிலாளர்களுக்கு ஏற்படுகின்ற இடையூறுகள் மற்றும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாகவும், வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் கலந்துரையாடலொன்று இன்று இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடலில் கடற்தொழில் சமசங்கள், கடற்தொழில் உதவி பணிப்பாளர், மாவட்ட அரச அதிகாரி, மேலும் சில உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
யாழ் மாவட்டத்திலே, 23000 கடற்தொழிலாளர்கள் காணப்படுகின்றனர். இந்த நிலையில் 20 ஆழ்கடல் மீன்பிடி படகுகள் தான் இந்த மீனவ சமூகத்தில் காணப்படுகிறது.
எனவே, யாழ் மாவட்ட மீனவர்களுக்கான ஆழ்கடல் மீன்பிடி படகுகள் அதிகரிக்கப்படவேண்டும்.
இந்த அதிகரிப்பானது நூறுவீத மானியமாக பெற்றுத் தந்து, அதில் ஐம்பது வீதத்தினை அரசாங்கத்திற்கு மீள்செலுத்தும் ஏற்பாட்டினை யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு கடற்தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும்.
இதற்கான காரணம், கடந்த காலங்கள் ஐம்பது வீத மானியம், ஐம்பது வீத கடன் என்ற அடிப்படையில் பல படகுகளுக்கு விண்ணப்பித்தும் இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
அதேநேரம், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு கடற்தொழிலாளர்கள் ஐம்பது வீத கடனை வங்கிகளில் பெறுவதற்கும் பல்வேறு நெருக்கடிகளை எதிர் நோக்குகின்றார்கள்.
எனவே, கடற்தொழிலாளர்களுக்கு ஆழ்கடல் மீன்படி படகை நூறுவீத மானியமாக பெற்றுத் தந்து, அதில் ஐம்பது வீதத்தினை இலங்கை கடற்தொழில் அமைச்சுக்கு செலுத்தக்கூடிய பொறிமுறையை வடக்கிற்கு விசேட திட்டமாக உருவாக்க வேண்டும். இதுவே எமது கோரிக்கை என தெரிவித்தார்.
மேலும், இந்திய அல்லது உள்ளூர் இழுவை படகு தொடர்பில் கலந்துரையாடப்பவில்லை என குறிப்பிட்டார்.
இதேவேளை, மீன்படி சம்பந்தமான முறை, அது தொடர்பிலான ஏற்றுமதி இறக்குமதி, விலைகள் மற்றும் கருவாடு பதனிடுதல், கரையோரங்களில் உள்ள அணிகள் அமைப்புகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.