கிளிநொச்சியில் சோகம்..! பாம்பு தீண்டி ஒன்றரை வயதுக் குழந்தை உயிரிழப்பு..!samugammedia

கிளிநொச்சியில் பேர்த்தியாரின் அரவணைப்பில் வளர்ந்த ஒன்றரை வயதுக் குழந்தை பாம்புக் கடிக்கு இலக்காகி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வேலை நிமித்தம் பெற்றோர் கொழும்பில் தங்கியுள்ள நிலையில் பேர்த்தியாரின் அரவணைப்பில் வளர்ந்த தனுஜன் ஜஸ்மின் என்ற ஒன்றரை வயதுக் குழந்தை கண்டங்கருவளை பாம்பின் கடிக்கு இலக்காகி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.

இந்தச் சோகச் சம்பவம் கிளிநொச்சி, பிரமந்தனாறில் நேற்றுமுன்தினம்(15) இடம்பெற்றுள்ளது.

வயல்வெளிக்கு அண்மையாகவுள்ள வீட்டில் கடந்த 14ஆம் திகதி இரவு நித்திரைக்கு குழந்தை சென்றுள்ளது.

திடீரென பேர்த்தியார் பாம்பு ஊர்வதைப் போன்று உணர்ந்ததையடுத்து எழுந்துள்ளார்.

அவர் உணர்ந்ததைப் போல அங்கே பாம்பொன்றைக் கண்டார். உடனே அவர் குழந்தையைத் தூக்கிக் கொண்டு வீட்டு முற்றத்துக்கு வந்துள்ளார். குழந்தையின் கையிலிருந்து குருதி வழிவதைக் கண்டு உடனடியாக தருமபுரம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மருத்துவமனைக்குப் குழந்தை மாற்றப்பட்டது.

கிளிநொச்சி மருத்துவமனையிலிருந்து கொழும்பு பொறளை மருத்துவமனைக்கு குழந்தை மாற்றப்பட்டு அங்கு நேற்றுமுன்தினம் மாலை உயிரிழந்துள்ளது.

Leave a Reply