இந்து சமயத்தைச் சார்ந்தவர்கள் கூலிக்கு மாரடிப்பவர்களாக, இனத்தைக் காட்டி கொடுப்பவர்களாக செயல்படுகின்றார்கள் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.
நேற்று நாகவிகாரையில் இடம்பெற்ற ரகசிய சந்திப்பில் குருந்தூர் மலையில் சிவன் கோவில் மற்றுமொரு புத்த விகாரை கட்டுவது என்ற தீர்மானத்தை இந்து – பௌத்த மதத்தலைவர்கள் இணைந்து எடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இது தொடர்பில் நேற்றுமாலை கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சச்சிதானந்தத்தோடு சில இந்து சமயத்தைச் சார்ந்தவர்கள் கூலிக்கு மாரடிப்பவர்களாக உள்ளனர், அவர்கள் குருந்தூர்மலை பற்றி கதைக்க அருகதையற்றவர்கள்.
குருந்தூர் மலை ஆதி சிவன் அய்யனார் ஆலயத்திலே பொங்கல் வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன.
இந் நிகழ்விலே தமிழ் மக்கள் பெருமளவில் கலந்து கொள்வார்கள். எனவே அதனை தடுக்க வேண்டும் என்ற நோக்கில் சிலர் செயற்படுகின்றனர்.
இந்தியாவின் உளவுத்துறையினுடைய தூதுவராக இருக்கக்கூடிய சிவசேனையினுடைய இலங்கை பிரதிநிதியான சச்சிதானந்தம் குருந்தூர்மலை ஆலயம் தொடர்பில் கருத்து சொல்வதற்கு எந்த அருகதையும் இல்லை. அவர் இந்தச் செயற்பாடுகளில் இருந்து ஒதுங்க வேண்டும்.
இந்துக்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையிலே மதரீதியாக முரண்பாடுகளை ஏற்படுத்துவதற்காக திட்டமிட்ட ரீதியிலே மதவெறி கருத்துக்களை சிவசேனை பரப்பிவருகின்றது.
தமிழருடைய இருப்பிற்கு நேரடியாக அச்சுறுத்தலாக இருக்கின்ற திட்டமிட்ட பௌத்தமயமாக்களுக்கு முழுமையாக துணைபோகும் விதமாக சச்சிதானந்தத்தின் கருத்துக்கள் அமைந்திருக்கின்றது.
அங்கு அவரோடு சென்றிருந்த சில இந்து சமயத்தை சார்ந்தவர்களும் கூலிக்கு மாரடிப்பவர்களாக, இனத்தை காட்டிகொடுப்பவர்களாக செயல்படுகின்றார்கள்.
அவர்களும் இந்தச் செயற்பாடுகளிலிருந்து ஒதுங்கிக் கொள்ளவேண்டும். உரிமைக்காக போராடிய மக்கள் குருந்தூர்மலையை எப்படி பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதை அவர்களே தீர்மானிப்பார்கள்.
பௌத்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு ஆரியகுளம் விகாராதிபதி துணை போகக்கூடாது. அவரோடு தமிழ் மக்கள் நல்லுறவோடு வாழ விரும்புகிறார்கள்.
அவர் சட்டவிரோதமான ஆக்கிரமிப்பு விகாராதிபதிகளை அழைத்து கூட்டம் நடத்துவது என்பது தமிழ் மக்கள் மத்தியில் பாரிய சந்தேகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்துகின்றது.
எனவே ஆக்கிரமிப்பு விகாராதிபதிகளோடு சேர்ந்து ஆரியகுளம் விகாராதிபதி செயற்பட வேண்டாம் என்பதனை தாழ்மையாக கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
இதேவேளை, வடக்கு மாகாணத்தில் ஐக்கிய தேசியக் கட்சியை மீளக் கட்டியெழுப்புவதற்கான முகவராக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் முயற்சிக்கின்றார் என அவர் இதன்போது செல்வராஜா கஜேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.
மாகாண ஆலோசனை குழு மற்றும் அதிகார பரவலாக்கல் குழு ஆகியன ஊடாக தமிழ் மக்களை ஏமாற்றி, ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் அதிபராக்குவதற்கு சி.வி.விக்னேஸ்வரன் மேற்கொள்ளும் ஏமாற்று நாடகம் இது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.