பதின்மூன்றே எமக்குப் பிடிக்கவில்லை அதற்கு அப்பால் என்னவென்று புரியவில்லை. இந்திய சுதந்திர நாட்டிலிருந்து வந்த சுதந்திரத் தூதுவராகவே நாங்கள் நடராஜனை பார்க்கின்றோம். ஆகவே விரைவாக நிரந்தரமான தீர்வைப் பெற்றுத் தாருங்கள் என செஞ்சொற் செல்வர் ஆறு.திருமுருகன் தெரிவித்தார்.
யாழில் இடம்பெற்ற பரத ஆடல் அரங்கேற்றம் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்தியாவின் முன்னாள் துணைத்தூதுவர் நடராஜன் தூதுவராக பொறுப்பேற்ற காலம் முதல் மக்களுக்கு சேவையாற்றினார்.
அந்த வகையில் திருக்கேதீச்சர திருப்பணிக்கு அளப்பெரும் பணியாற்றியதுடன் யாழ்ப்பாணத்தில் பிரமாண்டமான கலாச்சார மத்திய நிலையம் அமைய வேண்டுமென அல்லும் பகலும் உழைத்தார். இதேபோல் மாத்தளையில் தூதுவராக இருந்த காலத்திலும் இது போன்ற மகாத்மா காந்தி ஞாபகார்த்தமாக மண்டபத்தை அமைத்தார்.
மிக மூத்த அதிகாரியாகவும் இன்றளவும் இந்தியா நலன்களில் பணியாற்றிக் கொண்டிருக்கும் முன்னாள் இந்தியத் துணைத் தூதுவர் நடராஜன் எங்களின் கண்ணீரை பூரணமாக துடைக்க உதவ வேண்டும்.
பதின்மூன்றா, பதின்மூன்றரையா அல்லது பதின்மூன்றுக்கு மேலா எனத் தெரியவில்லை. பதின்மூன்றே எமக்குப் பிடிக்கவில்லை அதற்கு அப்பால் என்னவென்று புரியவில்லை. எனவே இந்திய சுதந்திர நாட்டிலிருந்து வந்த சுதந்திரத் தூதுவராகவே நாங்கள் உங்களைப் பார்க்கின்றோம்.
இந்த மண்ணை விடியச் செய்து நீதியை நிலைக்கச் செய்யுங்கள். விரைவாக நிரந்தரமான தீர்வைப் பெற்றுத் தாருங்கள்.
இதற்கு இந்தியா விரைவாகச் செயற்பட வேண்டும் என்பதை அறிந்து கடந்த சில தினங்களில் அறிந்துகொண்டீர்கள் எனத் தெரிவித்தார்