தனது இருப்பைத் தக்கவைப்பதற்காக எல்லா வழிகளிலும் போராட நிர்பந்திக்கப்பட்டுள்ள தமிழினத்தின் வரலாற்றை, வாழ்வியலை, உணர்வுநிலைகளைப் பேசும் பல்வேறு படைப்புகளை தமிழ்த் தேசியத் தளத்தில் நின்று படைத்தளிக்கும் தியா காண்டீபன் போன்ற இளம் எழுத்தாளர்களின் உருவாக்கம் நிறைவைத் தருகிறது. அத்தகைய படைப்பாளர்களின் படைப்புத்தளம் என்பது எமது இனத்தின் இருப்புக்கு வலுச்சேர்ப்பதாய் தொடர்ந்து விரிவடைய வேண்டும். அதற்குக் களம் அமைத்துக் கொடுக்கும் வகையில் தமிழ்த் தேசியக் கலை இலக்கியப் பேரவை தனது பணிகளை முன்னெடுக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (20) கரைச்சிப் பிரதேச சபை மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கலை இலக்கியப் பேரவையின் அங்குரார்ப்பணத்தோடு இணைந்த, புலம்பெயர் எழுத்தாளர் தியாவின் (இராசையா காண்டீபன்) ‘நீ கொன்ற எதிரி நான் தான் தோழா’ எனும் கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வில் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வனின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வடக்கு மாகாண முன்னாள் கல்வி அமைச்சர் தம்பிராஜா குருகுலராஜா, கரைச்சிப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன், கரைச்சிக் கோட்டக் கல்விப் பணிப்பாளர் சுப்பிரமணியம் தர்மரட்ணம், முரசுமோட்டை முருகானந்தாக் கல்லூரியின் அதிபர் திருமதி.சூரியகுமாரி இராசேந்திரம், துணுக்காய் கல்வி வலய ஆசிரிய ஆலோசகர் சுந்தரலிங்கம் லோகேஸ்வரன், ஆசிரியர் அருணாசலம் சத்தியானந்தன், தேசிய கல்வி நிறுவகத்தின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் சிதம்பரநாதன் கதிர்மகன், மூத்த எழுத்தாளர் குரு சதாசிவம் ஆகியோரோடு கவிஞர்கள், எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள், ஆசிரியர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.