வடகிழக்கு பிரதேசத்தை சிங்கள பௌத்த பூமியாக்கும் நிகழ்ச்சி நிரல் துரிதப்படுத்தப்பட்டுள்ளது – சத்திவேல்! samugammedia

அரச திணைகளங்களை இனவாத திணைக்களங்களாக்கி குறிப்பாக வடகிழக்கு பிரதேசத்தை சிங்கள பௌத்த பூமியாக்கும் நிகழ்ச்சி நிரல் 2009க்கு பின் துரிதப்படுத்தப்பட்டுள்ளது என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை  செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

இன்று (23.08.2023) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வடகிழக்கு தமிழர்களின் தேசியம் காக்க நாடாளுமன்றிலும் வெளியிலும் தொடர்ந்து குரல் கொடுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களின் தனிப்பட்ட வீட்டிற்கு முன் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான போராட்டத்தை ஆரம்பிக்க போவதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில பகிரங்கமாக அறிக்கை விடுத்து பொதுமக்களையும் திரளுமாறு கேட்டு இருப்பது அடிப்படை ஜனநாயக உரிமை மீறும் அசிங்க, அநாகரீக, இனவாத, மதவாத அரசியலாகும். இதனை வன்மையாக கண்டிப்பதோடு கௌரவ அரசியல் செய்யும் செய்ய விரும்பும் அனைத்து கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்றில் தமது எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும்.

இது அரசியல் ரீதியாக தமது அடையாளத்தை இழந்து கொண்டிருக்கும் கம்பன்பில அவர்கள் தாமே சிங்கள பௌத்தர்களின் காவலன், தேசப்பற்றாழன் என மக்கள் மத்தியில் தமது அரசியல் பிம்பத்தை கட்டி எழுப்ப எடுக்கும் ஈனத்தரமான அரசியல் நாடகமாகும்.

கஜேந்திரகுமார் அவர்களின் பொது அரசியலுக்கு எதிர்ப்பு தெரிவிக்க அவரின் தனிப்பட்ட சொந்த வீட்டுக்கு முன் அரசியல் ரீதியான ஆர்பாட்டம் செய்து முழு குடும்ப உறுப்பினர்களையும் அச்சத்தில் ஆழ்த்த எடுக்கும் செயல் கண்டிக்கப்பட வேண்டியதே. தகப்பன் படுகொலை செய்யப்பட்ட நகரிலே தற்போது மகனுக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றது. இது அவரை ஒத்த அரசியல் கருத்தியல் கொண்ட அனைத்து தமிழர்களுக்குமே அச்சுறுத்தல் விடுக்கும் செயற்பாடாகவே கொள்ளல் வேண்டும்.

தமிழ் அரசியல் தலைமைத்துவங்கள் குறிப்பாக கஜேந்திரகுமார் அவர்கள் நாடாளுமன்றத்திலும் வெளியிலும் முன்வைக்கும் அரசியல் கருத்துகளுக்கு அதே பாணியில் பதிலளிக்க திராணியற்றவர்கள் அடிமட்ட மக்களை வீதிக்கு இறக்கி துவேச அரசியலை முன்னெடுக்க நினைப்பது நாட்டின் சாபக்கேடெனவே குறிப்பிடல் வேண்டும்.

நாட்டின் பூர்வீக வரலாற்றை திரிபுபடுத்தி நாடு சிங்கள பௌத்தர்களுக்கு மட்டுமே சொந்தமானது என மக்களை நம்ப வைத்து அரச திணைகளங்களை இனவாத திணைகளங்கலாக்கி குறிப்பாக வடகிழக்கு பிரதேசத்தை சிங்கள பௌத்த பூமியாக்கும் நிகழ்ச்சி நிரல் 2009க்கு பின் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இதனை மேலும் வேகப்படுத்த அடிமட்ட மக்களின் துணையோடு அரச பயங்கரவாதத்தை முன்னெடுக்க முனைவது நாட்டை மேலும் அழிவுக்கு விட்டுச் செல்லும்.

இருளுக்குள் நாட்டை தள்ளி நாட்டின் சொத்துக்களை எல்லாம் சூறையாடி தனது சுயநல அரசியலை முன்னெடுத்தவர்களை மக்கள் அடையாளம் கண்டுள்ளனர். அவர்கள் எழுச்சிக் கொண்டு தமக்கு எதிராக திரும்பி விடுவர் எனும் பயத்தினால் அவர்களின் எழுச்சியை தடுக்கவும்; பாமர மக்களை தம் பக்கம் வைத்துக் கொள்ளவும்; அவர்களின் கண்களில் மண்ணைத் தூவி வன்முறையை கட்டவிழ்த்து விடவே கம்மன்பில போன்றவர்கள் திட்டமிடுகின்றனர்.இதற்கு அமைதியில் துணைபோகும் அரசியல் வாதிகளைப்போல் துறவிகளும் உண்டு.அவர்களும் கம்மனபிலவுக்கு பின்னால் இருக்கலாம்.

கம்மன்பில போன்றவர்களால் நடத்தும் போராட்டங்கள் மூலம் தமிழர்களின் உண்மை வரலாற்றை; வரலாற்று தொன்மங்களை அழித்தொழிக்க முடியாது. அதேப் போன்று அரசியல் அபிலாசைகளையும் புதைக்கவும் முடியாது. புதைக்கலாம் என்று 2009ல் நினைத்தனர். ஆனால் புதைக்க முடியாது என்பதற்கு அடையாளமாகவும், அதற்கெல்லாம் யாரெல்லாம் காவலாக இருக்கின்றார்களோ அவர்களையும் அரசியலால் சவால் விட முடியாது வன்முறையை கையில் எடுக்கவும் இனவாதத்தை தூண்டவும் எடுக்கின்ற முயற்சி மீண்டும் நாட்டை இருளுக்கே தள்ளும்.

தமிழர்களின் அரசியல் தலைமைத்துவங்கள் என தம்மை அடையாளப்படுத்த விரும்புகின்றவர்கள் புதிய வடிவிலான தமிழர்களுக்கு எதிரான ஆபத்தை உணர்ந்து சுயநல மற்றும் கட்சி தேர்தல் அரசியலுக்கு அப்பால் தமிழர்களின் சுயநிர்ணய மற்றும் தேசியம் காக்கும் அரசியலுக்கு மக்களை திரட்டி வேண்டும். மீண்டும் அழிவிற்கு வழி வகுப்பவர்களுக்கு மத்தியில் ஜனநாயக ரீதியில் சர்வதேச ரீதியில் ஒடுக்கப்படும் இனங்களோடு எமது குரலையும் இணைத்து கூட்டு செயற்பாட்டினை முன்னெடுப்பதே காலத்தின் தேவையாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *