மட்டக்களப்பில் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம்!

மட்டக்களப்பில் வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவினர்கள் சங்கத்தினர் நேற்றைய தினம்(23) திருமலை வீதியில் அமைந்துள்ள அமெரிக்க மிஷன் மண்டபத்திற்கு முன்பாக பாரிய போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.

கடந்த 22  ஆம் திகதி பௌத்த மதகுரு தலைமையிலான சட்ட விரோத காணி அபகரிப்பாளர்கள் சிலரால்   மட்டக்களப்பு மயிலத்தமடு  பகுதியில் ஊடகவியலாளர்கள் ,சர்வ மத தலைவர்கள் உள்ளிட்ட பலர் தடுத்து வைக்கப்பட்டிருந்தமையைக்   கண்டித்தே இப் போராட்டமானது முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் மட்டக்களப்பு மாவட்ட சங்கத்தினால் அறிக்கையொன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் ”கடந்த சில வருடங்களாக மட்டக்களப்பின் எல்லை பகுதிகள் பெரும்பான்மையினத்தவர்களினால் ஆக்கிரமிக்கப்படுகின்றது. இதனால் பண்ணை தொழிலாழிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக கடந்த 22 ஆம் திகதி மாதவளை மயிலத்தமடு பகுதியில் உள்ள பண்ணையாளர்களின் பிரச்சினைகள் தொடர்பாக பண்ணையாளர்களின் அழைப்பின் பெயரில் மயிலத்தமடுவிற்கு சென்ற ஊடகவியலாளர்கள் பல்சமய தலைவர்கள் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் தடுத்து வைக்கப்பட்டதுடன் அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.

ஊடகவியலாளர்களின் புகைப்பட கருவிகளிலிருந்து ஆவணங்களும் அளிக்கப்பட்டுள்ளன. அத்துடன் இச்செய்தி வெளிவரக்கூடாது எனக் கூறி வெற்றுத்தாலில் கையெழுத்தும் பெறப்பட்டுள்ளது.

இது ஊடகத் துறைக்கு விடுக்கப்பட்ட மிகப்பெரும் சவாலாகும். இராணுவத்தினராலும் புலனாய்வு பிரிவினாலும் தமிழ் ஒட்டுக் குழுக்களாலும் தொடர்ச்சியாக அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வரும் ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் தற்போது இனவாதம் கொண்ட காவி உடைதரித்த பிக்குகளினாலும் காடையர்களாலும் புதிதாக அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றனர்.

அதேவேளை எமது பெரும் மதிப்புக்குரிய மதத்தலைவர்கள் சைவ கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மத தலைவர்கள் அச்சுறுத்தப்பட்டமையும் எமக்கு மிகவும் வருத்தமளிக்கின்றது” எனவே சர்வதேசம் உடனடியாக இவ்விடையம் தொடர்பில் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சர்வதேச நீதி பொறிமுறைக்குள் இலங்கையை உட்படுத்தி சர்வதேச நீதிமன்றில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் நிறுத்த வேண்டும். மேலும் இவ்வாறானசம்பவங்கள் இடம் பெறுவதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *