மஹவ – ஓமந்தை தண்டவாள சீரமைப்பு திட்டத்தில் முறைகேடுகள்; ஜனாதிபதிக்கு கடிதம் சமர்ப்பித்துள்ள புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம்

இந்திய கடனுதவியுடன் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள மஹவ முதல் ஓமந்தை வரையிலான புகையிரத பாதையை நவீனமயப்படுத்தும் திட்டத்தின் பின்னணியில் பாரியளவிலான மோசடிகளும் ஊழல்களும் இடம்பெற்றுள்ளதாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளது.

இத்திட்டத்தின் ஊடாக வடக்கு வீதியை அபிவிருத்தி செய்து இரட்டைப் பாதையாக தரமுயர்த்துவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்பட்ட போதிலும், ஏனைய நோக்கங்களின் அடிப்படையில் இத்திட்டத்தை ஒற்றைப் பாதையாகப் சீரமைக்க நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தற்போது அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மஹவ முதல் ஓமந்தை வரையிலான புகையிரதத்தை நவீனமயமாக்கும் திட்டத்தை நாட்டுக்கு பயனுள்ள திட்டமாக மாற்றுவது தொடர்பில் கவனம் செலுத்துமாறு புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் ஜனாதிபதியிடம் மேலும் கோரிக்கை விடுத்துள்ளது.

இவ்வாறான நிலையில் இந்த தண்டவாள சீரமைப்பு பணிகள் காரணமாக அனுராதபுரத்திலிருந்து ஓமந்தை வரையிலான புகையிரத பாதை அபிவிருத்தி நோக்கங்களுக்காக மார்ச் 5 ஆம் திகதி முதல் 5 மாதங்களுக்கு மூடப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக கொழும்பில் இருந்து அனுராதபுரம் வரையிலும், யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சி வரையிலும் மட்டுமே ரயில்கள் இயக்கப்படும். தற்போது ஒரு மணிநேரத்திற்கு சுமார் 80 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்கின்றன. மஹவ தொடக்கம் ஓமந்தை வரையிலான பகுதியை அபிவிருத்தி செய்ததன் பின்னர் தொடருந்துகள் ஒரு மணிநேரத்திற்கு சுமார் 100 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *