யாழ். போதனாவில் சிறுமியின் கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்ட விவகாரம் – பெற்றோர் விடுத்துள்ள கோரிக்கை

எட்டு வயதான சிறுமியின் கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்டமை தமது மகளின் எதிர்கால வாழ்க்கையை கேள்விக்குட்படுத்தி சவாலானதாக மாற்றியுள்ளதாக பெற்றோர் தமது மகளின் இந்நிலைக்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் 12ஆம் விடுதியின் தாதிய உத்தியோகத்தர்களும் வைத்தியர்களும் வைத்திய நிபுணரும் வைத்தியசாலை நிர்வாகமுமே காரணமாகும் என குற்றஞ்சாட்டியுள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்திக்கு கடிதம் எழுதியுள்ளதுடன், வடக்கு மாகாண ஆளுநர், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, வடமாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், இலங்கை மருத்துவ சபை, யாழ்ப்பாண மாவட்ட செயலாளர், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை, சுகாதார அமைச்சர், பெண்கள் மற்றும் சிறுவர்கள் விவகார அமைச்சர் உள்ளிட்டவர்களுக்கு கடிதத்தின் பிரதி அனுப்பபட்டுள்ளது.

அக்கடிதத்தில்,

எமது மகளுக்கு நடைபெற்ற சம்பவம் தொடர்பில் உடனடியாக குறித்த தாதிய உத்தியோகத்தரை பணிநீக்கம் செய்ய வேண்டும், 

குறித்த சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட வைத்தியர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், விடுதிக்குப் பொறுப்பான வைத்திய சிகிச்சை நிபுணர் அனைவருக்கும் எதிராக உரிய விசாரணைக்கு உத்தரவிடப்படுவதுடன் சட்ட நடவடிக்கையும் எடுக்க வேண்டும்.

பிள்ளைக்கு ஏற்பட்ட உடல் உளரீதியான மீள முடியாத தாக்கத்திற்காகவும் எமக்கும் எமது குடும்பத்திற்கும் ஏற்பட்ட மீள முடியாத தாக்கத்திற்காகவும் தங்களிடமிருந்து நீதியானவிசாரணையையும் நியாயமான தீர்ப்பையும் எதிர்பார்த்து நிற்கின்றோம்.

விசாரணை முடிவில் குறித்த சம்பவத்துக்கான (கை அகற்றப்பட்டதற்கான) சரியான மருத்துவ காரணத்தையும் எழுத்து மூலம் அறியத்தர வேண்டும், எதிர்காலத்தில் இவ்வாறான மருத்துவ நிராகரிப்புக்களினால் உயிர் இழப்புக்கள் அவய இழப்புக்கள் ஏற்படா வண்ணம் எங்களுடைய சமூகத்தை பாதுகாக்கும்படி பாதிக்கப்பட்ட எங்களது குழந்தையின் சார்பில் வேண்டி நிற்கின்றோம் – என அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் எடுக்கப்படவுள்ள குற்றவியல் மற்றும் குடியியல் வழக்கு நடவடிக்கைகளை மட்டுப்படுத்தாமலும், அதற்கு பங்கம் ஏற்படாதவாறும் இக்கடிதம் அனுப்பப்படுகிறது என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply