வடமாகாணத்தின் 14வது விளையாட்டு விழா வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் இன்றையதினம்(06) காலை ஆரம்பமானது.
வடமாகாணத்தில் உள்ள 651 பாடசாலைகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் கோட்ட மட்ட மற்றும் வலய மட்ட வெற்றிகளின் பின்னர் மாகாண விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றவுள்ளனர்.
வவுனியா, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 13 கல்வி வலயங்களைச் சேர்ந்த ஏறக்குறைய 5000 விளையாட்டு வீரர்கள் விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றவுள்ளதாக மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
120 விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெறும் 14ஆவது வடமாகாண விளையாட்டுப் போட்டிகள் இன்று முதல் எதிர்வரும் 10ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. அத்துடன் இவ்வருட விளையாட்டு விழாவில் 08 புதிய விளையாட்டு நிகழ்வுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
மாகாண விளையாட்டுப் போட்டிகளுக்கு முன்னர் இவ்வருடம் இடம்பெற்ற வலய மட்ட விளையாட்டு நிகழ்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பதக்கங்கள் மற்றும் வெற்றிச்சின்னங்களை வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் வடமாகாண பிரதம செயலாளர் எஸ்.எம்.சமன் பந்துலசேன, கல்வி அதிகாரிகள், விளையாட்டு அதிகாரிகள் உட்பட விருந்தினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.