6 கோடி மதிப்பிலான ஐஸ் போதைப்பொருள் பறிமுதல்:- பெண் உட்பட நால்வர் கைது! samugammedia

இலங்கைக்கு கடத்துவதற்காக வேதாளை மீனவ கிராமத்தில் உள்ள வீடு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த  6 கோடி மதிப்புள்ள 6 கிலோ ஐஸ் போதைப்பொருள் பறிமுதல் செய்த மண்டபம் போலீசார் ஐஸ் போதைப்பொருளை இலங்கைக்கு கடத்த முயன்ற  பெண் உட்பட நாலு பேரை கைது செய்து  விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்துள்ள தனுஷ்கோடி கடல் பகுதி  இலங்கைக்கு மிக அருகே இருப்பதால் மண்டபம் அடுத்த வேதாளை, சீனியப்பா தர்கா மற்றும் மரைக்காயர் பட்டினம் உள்ளிட்ட கடற்கரைகளில் இருந்து இலங்கைக்கு போதை பொருட்கள் சமீபகாலமாக அதிக அளவு கடத்தப்பட்டு வருகிறது.

கடல் வழியாக நடைபெறும் போதை பொருள் கடத்தல் சம்பவங்களை  தடுக்க மத்திய, மாநில உளவுத்துறை, மாவட்ட காவல்துறை, மரைன் போலீசார் மற்றும்  சுங்கத்துறை அதிகாரிகள்  தீவிர கண்காணிப்பில்  ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 7 ஆம் திகதி வியாழக்கிழமை  மண்டபம் அடுத்த வேதாளை எம்ஜிஆர் நகரில் வசித்து வரும் சேதுராஜன் என்பவர் வீட்டில் இலங்கைக்கு கடத்துவதற்காக போதை பொருள் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் ராமநாதபுரம் சரக டிஐஜி துரை உத்தரவின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை கண்காணிப்பில் ராமேஸ்வரம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் உமாதேவி மற்றும் மண்டபம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர்கள் அடங்கிய போலீசார் சேது ராஜன் வீட்டில் அதிரடி சோதனை  நடத்தினர்.

அப்போது  வீட்டில் 6 பாக்கெட்டுகளில் 6 கிலோ ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.

இது தொடர்பாக வீட்டின் உரிமையாளர் நாககுமார் மற்றும் சூடவலைகுச்சு பகுதியை  சேர்ந்த அவரது உறவினர் சக்திவேல் ஆகியோரிடம்  போலீசார் நடத்திய விசாரணையில் சென்னையில் இருந்து ஐஸ் போதைப்பொருள் காரில் வாங்கி வந்ததாக தெரியவந்ததையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் மண்டபம் காவல் நிலையம் அழைத்து சென்று தொடர்ந்து  அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

கைது செய்யப்பட்ட இருவரிடமும் நடத்திய தொடர் விசாரணையில் வேதாளை எம்ஜிஆர் நகரை சேர்ந்த மாரியம்மாள் மற்றும் கூடை வலை குச்சு பகுதியை சேர்ந்த பாக்கியராஜ் ஆகிய இருவரும் ஐஸ் போதை பொருளை நாககுமாருக்கு சொந்தமான நாட்டுப்படகில்  இலங்கைக்கு கடத்தி செல்ல  உடந்தையாக  இருந்தது தெரியவந்ததையடுத்து  அவர்கள் இருவர் என மொத்தம் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் நால்வரையும் கைது செய்தனர்.

கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருளின் சர்வதேச மதிப்பு 6 கோடி எனவும் ஐஸ் போதைப்பொருள் கடத்தல் வழக்கில்  நான்கு பேர்  செய்யப்பட்டுள்ளதாகவும்,  மேலும் ஐஸ் போதை பொருட்களை சென்னையில்  யாரிடம் இருந்து பெறப்பட்டது என்பது  குறித்து தனிப்படை போலீசார் தொடர்ந்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய இலங்கை சர்வதேச கடல் எல்லை வழியாக  இருநாட்டு பாதுகாப்பையும் மீறி பல கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருட்கள் நாட்டு படகுகளில் தொடர்ந்து கடத்தப்பட்டு வரும் சம்பவம் பாதுகாப்பு வட்டார அதிகாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply