முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் செப்ரெம்பர் (06) உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிலையில் நான்காம் நாள் அகழ்வாய்வுகள் இன்று தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினர் மற்றும், தொல்லியல் ஆய்வாளர் பரமு புஷ்பரட்ணம், யாழ்ப்பாணம் சட்டவைத்திய அதிகாரி ஆகியோரால், சட்டத்தரணி எஸ்.துஸ்யந்தி ஆகியோரின் பங்கேற்புடன் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த மனிதப் புதைகுழி இரண்டாம் நாள் அகழ்வாய்வின் போது துப்பாக்கி சன்னங்கள் என சந்தேகிக்கப்படும் உலோக துண்டுகள், துப்பாக்கி சன்னங்கள் துளைத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் ஆடைகள் தடையப்பொருட்களாக மீட்கப்பட்டிருந்தன.
மூன்றாம் நாள் அகழ்வில் தமிழீழ விடுதலை புலிகளின் பெண் போராளிகள் உடையது என சந்தேகிக்கப்படும் உடல் எச்சங்கள் இரண்டு முழுமையாக மீட்கப்பட்டதுடன் குறித்த உடல்களுடன் காணப்பட்ட ஆடைகளில் சில இலக்கங்களும் பொறிக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் இன்றையதினம் நான்காவது நாள் அகழ்வின் போது சில முக்கிய தடையப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள போதிலும் இது தொடர்பாக அதிகார பூர்வமாக கருத்து தெரிவிப்பதற்கு அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அடையாள இலக்கத் தகடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
இருந்த போதிலும் இது தொடர்பில் அதிகார பூர்வமாக தகவல் வெளியிட இன்று பொறுப்பாக இருந்த யாழ் சட்ட வைத்திய அதிகாரி செ.பிரணவன் மறுப்பு தெரிவித்துவிட்டார். அகழ்விற்கு பிரதானமாக செயற்படுகின்ற சட்ட வைத்திய அதிகாரி க.வாசுதேவா இன்று விடுமுறையில் சென்றுள்ளதாக தெரியவருகின்றது.
இன்றும் குறித்த மனிதப் புதைகுழி வளாகத்தை பார்வையிடுவதற்கென யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் குழு ஒன்று வருகை தந்திருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.