கச்சதீவை இந்தியா ஒன்றும் எமக்கு தாரைவார்க்கவில்லை அது எமது தீவு அதனை வேறுயாரும் உரிமை கோர முடியாது என வட மாகாண கடற்றொழிலாளர் இணைய தலைவர் NV.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கச்சத்தீவு பிரச்சினை என்பது காலத்துக்கு காலம் இந்தியாவிலே செய்யப்படுகின்ற அரசியல் நாடகம் அந்த அரசியல் நாடகத்துக்கு அமைவாக தமிழ் நாட்டு அரசாங்கம் அதை ஒரு பேசு பொருளாக்கி கொண்டிருக்கிறது.
நாங்கள் கோருகின்ற கோரிக்கை இழுவை மடி தொழிலை இல்லாதொழிப்பது. இழுவை மடித்தொழிலுக்கும் கச்சதீவுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. இருந்தும் கச்சதீவு என்ற ஒரு பதத்தை வைத்துக்கொண்டு அவர்கள் பேச்சு வார்த்தை நடத்தி கொண்டிருக்கிறார்கள் அல்லது பேசுவதற்கு எத்தனிக்கிறார்கள் ஆனால் இந்திய இழுவை மடித்தொழிலாளர்களை ஏமாற்றுவதற்காகவும் அவர்களை வேறு திசைக்கு திருப்புவதற்காகவும் அவர்கள் நடத்தும் நாடகம்.
முக்கியமான ஒரு விடயத்தை நான் உங்களுக்கு தெளிவு படுத்த வேண்டும். இந்தியா , இலங்கை ஆகிய இரண்டு நாடுகளுக்குமிடையே 1974 ஆம் ஆண்டு ஒரு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதற்காக இந்தியா ஒரு வல்லரசு. ஒரு பெரிய நாடு.
இந்த நாட்டுக்குள் இருக்கின்ற கச்சதீவை நாங்கள் வலுக்கட்டாயமாக பிடித்தோமோ? கச்சதீவை எங்களுக்கு தரச்சொல்லி கேட்டோமா? இப்படியான ஒரு ஒப்பந்தத்தில் எதுவும் சொல்லப்படவில்லை. ஆனால் பேச்சுவார்த்தை நடந்திருக்கின்றது. அப்படியானால் அதற்கு என்ன காரணம்? அதனை கண்டுபிடிக்க வேண்டும்.
1947 ஆம் ஆண்டு பிரித்தானிய அரசாங்கம் அங்கே சுதந்திரத்தை கொடுத்தது. சந்தர்ப்ப வசமாக 1948 ஆம் ஆண்டு இலங்கைக்கு சுதந்திரத்தை கொடுத்தது.
இந்த இரண்டு நாட்டையும் விட்டு விட்டு போகும் பொழுது அவர்களால் ஆளுகை செய்யப்பட்ட இரண்டு நாட்டுக்கும் இடையிலிருந்த இந்த கச்சதீவை எந்த நாட்டுக்கு என்று சொல்லாமல் போய்விட்டார்கள். அதன் காரணமாக இலங்கை யர்கள் கச்சத்தீவை உரிமை கொண்டாடினார்கள்.
அதே போல் இந்தியர்களும் உரிமை கொண்டாடி இழுபறி நடந்த நேரத்திலே இந்திராகாந்தி ஆட்சிக்காலத்தில் அங்கோர் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அந்த பேச்சுவார்த்தையின் போது இந்தியா பக்கத்திலிருந்து கைவிட்டதே தவிர இந்தியா எங்களுக்கு சொந்தமாக தரவுமில்லை. கச்சத்தீவு இந்தியாவின் ஆதிக்கமாக இருந்தால் ஒருபோது எங்களுக்கு அதனை விட்டு தந்திருக்க மாட்டார்கள் .
இது இரண்டுக்கும் இடையில் இருக்கிற படியால் அவர்கள் அதனை விட்டு தந்திருக்கிறார்கள் ஒழிய எங்களுக்கு கச்சதீவு இந்தியாவால் வழங்கப்பட்டதில்லை. இது தப்பான கருத்து. இந்தியாவுக்கு சொந்தமான தீவு அல்ல கச்சதீவு. இதனை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
அதை வைத்துக்கொண்டு அங்குள்ள மக்களை அரசியல் நாடகத்துக்காக ஏமாற்றுகிறார்களே தவிர இந்தப்பிரச்சினையை பெரிசாக காட்டி அரசியல் இலாபமடையபோகின்றார்.
இதிலே மோடி அவர்களும் 2016 ஆம் ஆண்டு பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட இணக்கப்பாட்டை ஓரம் தள்ளி விட்டு தான் வேறு திசைக்கு செல்வதற்காகவே கச்சத்தீவை எடுத்திருக்கிறார்.
நாங்கள் இப்பொழுது அவர்களுக்கு உறுதி படச் சொல்வது 2016 ஆம் ஆண்டு அரசு மட்ட பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையிலிருந்து இந்த பேச்சு வார்த்தை ஆரம்பித்தால் அது எங்களுக்கு அதுக்கான ஒரு விடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதற்கும் கச்சத்தீவுக்கும் எந்த தொடர்புமில்லை என்பதை ஆணித்தரமாக கூறுகின்றேன் என தெரிவித்துள்ளார்.