வவுனியா பிரதேச செயலக இந்து கலாசார உத்தியோகத்தரின் கண்காணிப்பின் கீழ் உள்ள ஆலயம் ஒன்றின் மகோற்சவத்தின் போது குருக்கள் ஒருவர் மது போதையுடன் வருகை தந்ததுடன், சாராயப் போத்தல் மற்றும் மாவா என்பனவும் ஆலய பக்தர்களால் மீட்கப்பட்டு குருக்கள் விரட்டியடிக்கப்பட்டுள்ளார்.
நேற்று இரவு (10.09) இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா பிரதேச செயலக இந்து கலாசார உத்தியோகத்தரின் கண்காணிப்பின் கீழ் உள்ள ஆலயம் ஒன்றின் மகோற்சவம் நடைபெற்று வருகின்றது. குறித்த மகோற்சவத்திற்கு வருகை தந்த குருக்கள் மது போதையில் ஆலயத்திற்கு சென்று பூஜை செய்ததுடன், அங்குள்ள மக்களுடனும் முரண்பட்டுள்ளார்.
குறித்த குருக்கள் மது போதையில் இருந்துள்ளதுடன், அவரிடம் இருந்து சாராயப் போத்தல் மற்றும் மாவா என்பனவும் ஆலயப் பக்தர்களால் மீட்க்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஆலய பக்தர்கள் பிறிதொரு குருக்களை அழைத்து, அவரிடம் குறித்த குருக்களை ஒப்படைத்து ஆலயத்தில் இருந்து வெளியேற்றியுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் ஆலய நிர்வாகத்தினரால் மாவட்ட அந்தணர் ஒன்றியம், மாவட்ட மற்றும் பிரதேச செயலக இந்து காலாசார உத்தியோகத்தர் ஆகியோரிடமும் முறைப்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வவுனியாவில் சில குருமார் தொடர்பான பல முறைப்பாடுகள் அண்மைகாலமாக முன்வைக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.