இலங்கையில் சிறைச்சாலை நிறுவனங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விசேட நிகழ்ச்சிகள்! samugammedia

செப்டம்பர் 12ஆம் திகதி  சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கைதிகளின் உடல், மன மற்றும் ஆன்மீக வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு வருடமும் பல வேலைத்திட்டங்கள் இடம்பெற்று வருகிறது.

 அதேபோன்று இந்த வருடமும் பல வேலைத்திட்டங்களை மேற்கொள்ள சிறைச்சாலைகள் திணைக்களத்தின் புனர்வாழ்வுப் பிரிவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடக பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

அதன் பிரகாரம், அன்றைய தினம் சர்வமத நிகழ்வுகள், சுகாதார வேலைத்திட்டங்கள், விளையாட்டு மற்றும் ஆளுமை நிகழ்ச்சிகள், கல்வி மற்றும் போதனை நிகழ்ச்சிகள், குடும்ப சந்திப்புகள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான வேலைத்திட்டங்கள், கலாசார நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்த நிகழ்ச்சிகள் சிறைச்சாலைகள் நிறுவனத்துக்குள் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் அன்றைய தினம் அனைத்து சிறைச்சாலைகளிலும் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் சிறைக்கைதிகளுக்கு விசேடமான உணவு வேளை ஒன்றையும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

அத்துடன் சிறைக்கைதிகளின் ஆக்கத்திறமைகளை வெளிப்படுத்தும் நோக்கில் சிறைச்சாலைகள் திணைக்களம் மற்றும சிறைக்கைதிகள் நலன்புரி சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் சிறைப்படாத எண்ணங்கள் எனும் பெயரில் சித்திரக் கண்காட்சி நாளை திங்கட்கிழமை 11ஆம் திகதி காலை 9 மணிக்கும், சிறைக்கைதிகள் தின தேசிய விழா 12ஆம் திகதி மாலை 2.30 மணிக்கும் நீதி, சிறைச்சாலைகள் நடவடிக்கை மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ மற்றும் இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன தலைமையில் கொழும்பு பொது நூலக வளாகத்தில் இடம்பெறவுள்ளது.

சித்திரக் கண்காட்சி நாளையும் நாளை மறுதினமும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கொழும்பு பொது நூலக வளாகத்தில் காட்சிப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply