இலங்கையின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கு தேசிய கல்விக் கொள்கையொன்றை உருவாக்குவது காலத்தின் தேவையாக இருப்பதாக இலங்கையில் உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கான பொருத்தமான பரிந்துரைகளை வழங்குவதற்கான பாராளுமன்ற விசேட தெரிவுக் குழுவின் தலைவர் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ, தெரிவித்தார்.
போட்டித் தன்மைகொண்ட கல்வி முறையொன்று இருக்கும் வரையில் நல்லொழுக்கமுள்ள சமூகத்தை கட்டியெழுப்ப முடியாது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
தொழிற்பயிற்சிக் கல்வி நாட்டின் தற்போதைய தேவை எனவும், பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்படும் அங்கீகாரம் அந்த நிறுவனங்களுக்கும் வழங்கப்பட வேண்டும் எனவும் அமைச்சர் வலியுறுத்தினார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (12) நடைபெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இதனைத் தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ,
“இந்த நாட்டின் கல்வி, உயர் தரத்தில் அமைந்துள்ளது. ஆனால், அவற்றில் நம் பிள்ளைகள் உயர்கல்வி பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன. இன்றிருக்கும் போட்டித் தன்மையான கல்வி முறை, குழந்தைகளின் திறன், அறிவு மற்றும் புத்திசாலித்தனத்தை வளர்க்க பயிற்றுவிப்பதில்லை. தற்போது மனனம் செய்யும் வெறுமனே அறிவை மாத்திரம் வழங்கும் ஒரு கல்வி முறையே உள்ளது.
ஐந்தாம் தர புலமைப்பிரிசில் பரீட்சை, ஆரம்பத்திலேயே ஒரு போட்டித் தன்மையை ஏற்படுத்துகின்றது. இந்தப் போட்டியால் குழந்தைகளிடையே வெறுப்பும், கோபமும் எழுகிறது. பரீட்சையில் அதிக புள்ளிகள் பெற்றாலும், மறுபுறம் மானிடப் பண்புகளில் வளர்ச்சி ஏற்படுவதில்லை. மேலும், சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பரீட்சைகளிலும் போட்டி நிலவுகிறது. போட்டித் தன்மையைக் கொண்ட கல்வி முறை இருக்கும் வரை, நாட்டிற்காக ஒரு தன்னலமற்ற சமூகத்தை உருவாக்குவது கடினம்.
உலகில் வளர்ந்த நாடுகளில் உள்ள கல்வி முறையைப் பார்த்தால் சாதாரண தரம் போன்ற பரீட்சைகள் நடைபெறுகின்றன. ஆனால் புள்ளி வழங்கும் முறை இல்லை. ஒவ்வொரு பிள்ளையையும் சித்தி அடையச் செய்வதுடன், குறைந்த புள்ளிகளைக் கொண்ட பிள்ளைகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்படுகிறது. சிறந்தக் கல்வியைக் கொண்ட நாடாகத் தரவரிசையில் முன்னிலையில் உள்ள பின்லாந்தில் 1970 இல் நம் நாட்டில் இருந்த அதே கல்வி முறையே உள்ளது.
பிள்ளைகளுக்கு ஓய்வுடன் கூடிய மனநிலை இருக்கவில்லை என்றால், அறிவைப் புரிந்துகொள்வது கடினம். பல நாடுகளில் பிரத்தியேக தனியார் வகுப்புக்கள் நடத்தப்படுவதில்லை. ஆனால் அவர்கள் கல்வி நிலையில் வெற்றிகரமாக உள்ளனர். போட்டியின் பின்னர் பல்கலைக்கழகங்களுக்குள் பிரவேசிக்கும் பெரும்பாலான மாணவர்கள், மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்தக் காரணங்களுக்காக, பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்படும் முன்னுரிமையை முன்பள்ளி மேம்பாட்டுக்கும் வழங்க வேண்டும் என்று நாம் பரிந்துரைத்துள்ளோம். உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு கற்பிப்பது கடினமல்ல. ஆனால் முன்பள்ளிப் பருவத்தையே நாம் முதலில் சீர்செய்ய வேண்டும்.
தற்போது உயர்கல்வி முறையில் ஒரு ஒழுங்கமைக்கப்படாத கல்வி முறையே காணப்படுகின்றது.16 அரச பல்கலைக்கழகங்கள் உள்ளன. அந்த அரச பல்கலைக்கழகங்கள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் நிர்வகிக்கப்பட்டாலும், அவை சுதந்திரமாக செயல்படுகின்றன. பல்கலைக்கழகங்களுக்குத் தேவையான வசதிகளை வழங்கும் நடவடிக்கைகளையே பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு நிறைவேற்றுகின்றது. இலவசக் கல்வி தனியாருக்குத் திறந்து விடப்பட்டாலும் அதற்கான முறையான பொறிமுறையொன்று இன்னும் தயாரிக்கப்படவில்லை.
வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களும், அவற்றின் கிளைகளாக இயங்கும் பல்கலைக்கழகங்களும் இந்நாட்டில் உள்ளன. அவற்றின் தரத்தைக் கண்காணிக்கவும் எந்தப் பொறிமுறையும் இல்லை. தொழிற்பயிற்சி அதிகார சபையின் கீழ் கல்வி நிறுவனங்கள் உள்ளன. தொழிற்கல்வி நிறுவனங்களுக்கு பல்கலைக்கழகங்களுக்கு இருக்கும் அங்கீகாரம் இல்லை. தற்காலத்தில் தொழில் பயிற்சிக் கல்வி நாட்டின் தேவையாக இருப்பதனால், அதற்கான அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும்.
இந்த சூழ்நிலையில் நாட்டின் இளைஞர் சமூகம் தொழிற்கல்வியில் கவனம் செலுத்துவதை தவிர்த்து வருகின்றது. ஏனைய நாடுகளில், அவர்களுக்கு தமது தொழில்பயிற்சி தொடர்பான பட்டத்தை வழங்குகிறார்கள். இங்கு அவ்வாறு தொழில்பயிற்சிக்காக குறித்த நிறுவனங்களால் பட்டம் வழங்கப்படுவதில்லை. அதனால்தான் இந்த நாட்டின் கல்வி முறையில் முழுமையான மாற்றம் இடம்பெறவேண்டும் என்று நாங்கள் பரிந்துரைத்துள்ளோம்.
இந்திய மாதிரியை ஆய்வு செய்து, 1978 இல் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இலங்கையில் நிறுவப்பட்டது . இப்போது இந்தியா அந்த உயர் கல்வி முறையை நீக்கிவிட்டு வெகுதூரம் சென்று விட்டது. இன்று இந்தியாவில் ஒரு சுதந்திரமான உயர்கல்வி ஆணைக்குழுவே உள்ளது. கல்வித் துறை, அரசாங்கத்துக்குரியதா அல்லது தனியாருக்குரியதா என்பதைப் பொருட்படுத்தாமல், முறையான தரநிலைகளின்படி கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடுகளுடன் பல்கலைக்கழகங்கள் அங்கு பதிவு செய்யப்படுகின்றன.
நமது நாட்டில் உயர்கல்வி வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கத் தவறுவதனாலேயே சில மாணவர்கள் வெளிநாடு செல்கின்றனர். மேலும், மாணவர்களின் காலத்தை வீணடிப்பது கடுமையான குற்றமாகும். பரீட்சை முடிந்து பெறுபேறுகள் வெளியிடப்படும் வரை, பல மாதங்களாக அவர்கள் வீட்டிலேயே தங்கியிருக்கின்றனர். மாணவர்களின் காலத்தை வீணடிக்கும் கல்வி முறை மாற்றப்பட வேண்டும்.
இவ்வாறான நிலையில், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் தொழிற்பயிற்சி அதிகார சபைக்குப் பதிலாக சுயாதீனமாக செயற்படக்கூடிய உயர்கல்வி ஆணைக்குழு ஒன்றை நாம் முன்மொழிந்துள்ளோம். இனிமேல், கல்விக் கடைகள் உருவாக்கப்படுகின்றன என்றும், கல்வி, பணத்திற்கு விற்கப்படுகின்றது என்றும் கல்வி தரமற்றது என்றும் யாரும் கூற முடியாது. கடந்த காலத்தில் கல்வி முறையில் ஏற்பட்ட தவறுகள் எதிர்காலத்தில் நடபெறாமல் இருக்க பல்வேறு ஆலோசனைகளை முன்வைத்துள்ளோம். மேலும், 10 ஆம் வகுப்பில் சாதாரண தரப் பரீட்சையையும், 12ஆம் வகுப்பில் உயர்தரப் பரீட்சையை நடத்துவது குறித்தும் பரிந்துரைகளை முன்வைத்துள்ளோம்.
ஒரு தெரிவுக் குழுவாக, இதுபோன்ற பல்வேறு அடிப்படை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக ஆழமாக ஆய்வு செய்த பின்னரும், நிபுணர்கள், வல்லுனர்கள் உட்பட துறைசார் நபர்கள் அனைவரிடமும் கருத்துகளைப் பெற்றே குறித்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள இலவசக் கல்வி முறை தொடர்பில் விரிவான கருத்தாடல் ஒன்று அவசியம். நாட்டு மக்களையும் உள்ளடக்கிய தேசிய அரச கொள்கையொன்றை தயாரிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தின் சட்டமொன்றை நிறைவேற்றுவதன் மூலமே இந்தக் கொள்கை தயாரிக்கப்பட வேண்டும். அரசாங்கங்கள் , அமைச்சர்கள் மாறிவிட்டார்கள் என்பதற்காக அந்தக் கொள்கை மாறக்கூடாது.
இந்த நாட்டில் கல்வி முறையில் சீர்திருத்தங்களை ஏற்படுத்துவது குறித்து சிலர் அரசியல் ஆதாயம் அடையலாம். பிள்ளைகளின் கல்வியை அழித்து விடுவதா? இல்லையா? என்பதை நாட்டு மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். எனவே, நாட்டின் கல்வி முறையை மாற்றுவதற்கு அவசியமான வழிகாட்டல்களை வழங்க நாம் தயாராக உள்ளோம். ஆனால் இந்த நாட்டில் உயர்கல்வியை சீர்குலைக்கும் அமைப்புகளுக்கு வேண்டியவாறு செயற்பட அரசாங்கம் தயாராக இல்லை.” என்றும் இலங்கையில் உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கான பொருத்தமான பரிந்துரைகளை வழங்குவதற்கான பாராளுமன்ற விசேட தெரிவுக் குழுவின் தலைவர் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ, தெரிவித்தார்.