விடுதலைப் புலிகள் கிரிக்கெட்டை தடைசெய்யவில்லை…! மக்களுக்கு அவர்களால் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை…! மனம் திறந்த முரளீதரன்…!samugammedia

தமிழீழ விடுதலைப் புலிகள் துடுப்பாட்டம் உள்ளிட்ட விளையாட்டுக்களுக்கு ஒருபோதும் தடைவிதிக்கவில்லை. அவர்கள் விளையாட்டுத்துறைக்கு  எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணி வீரர் முத்தையா முரளீதரன் தெரிவித்துள்ளார்.

தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

துடுப்பாட்டம் உள்ளிட்ட விளையாட்டுக்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் ஒருபோதும் தடைவிதிக்கவில்லை என்பதுடன் விளையாட்டுத்துறைசார் செயற்பாடுகளுக்கு அவர்கள் எந்தவிதமான பாதிப்புக்களையும் செய்யவில்லை.

அவர்களின் குறிக்கோள் அரசியல்வாதிகள் மற்றும் அரசியல்துறை என்பனவே. இந்நிலையில் அவர்கள் சாதாரண மக்களுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. அதேவேளை குறித்த காலப்பகுதியில் யார் அரசியல்வாதிகள் யார் சாதாரண மக்கள் என்று அறியாது பாதிக்கப்படும் நிலை தான் 30 வருடங்களாக இலங்கையில் காணப்பட்டது எனவும் தெரிவித்தார்.

அதேவேளை விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை நீங்கள் சந்தித்திருக்கின்றீர்களா என முரளீதரனிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு,

3 சந்தர்ப்பங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளை சந்தித்திருந்தேன். அதாவது கடந்த 2002ம் ஆண்டு ஐ.நாவின் உணவு தூதராக இலங்கையில் பணியாற்ற எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது.

அந்த சந்தர்ப்பத்தில் நான் அனைத்து பகுதிகளுக்கும் விஜயம் செய்து ஐ.நாவால் இலவசமாக வழங்கப்படும் உணவுப்பொருட்கள் ஒழுங்கான முறையில் பகிர்ந்தளிக்கப்படுகின்றதா?  மக்களுக்கு ஒழுங்கான முறையில் கொண்டுசேர்க்கப்படுகிறதா என கண்காணித்தேன்.

இவ்வாறான நிலையில் விடுதலைப் புலிகளின் தலைமையகத்திற்கும் சென்று அங்குள்ள நிலைமையை ஆராய்ந்தேன். அதன்போது விடுதலைப் புலிகள் எனக்கு மதிய உணவை வழங்கினார்கள். அந்த நேரத்தில் பேசியதே 800 எனும் திரைப்படத்தில் வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை தனியார் நிறுவனமொன்றினால் கிரிக்கெற்றை ப்ரமோட் பண்ணுவதற்காக புலிகளின் இடங்களுக்கு சென்று கிரிக்கெட்டும் விளையாடியுள்ளேன்.

அதேவேளை, சுனாமி அனர்த்தத்தின் போதும் புலிகளின் பகுதிக்கு சென்று அங்குள்ள நிலைமையை ஆராய்ந்து மக்களுக்கு தேவையான உணவு வழங்கல் செயற்பாட்டையும் முன்னெடுத்ததுடன் மக்களுடன் நேரடியாக கதைத்து பாதிப்புக்கள் தொடர்பிலும் கேட்டறிந்தேன் எனவும் முத்தையா முரளிதரன் பதிலளித்தார்.

Leave a Reply