இலவச கண்புரை சத்திரசிகிச்சைக்கான பரிசோதனை முகாம் தொடர்பான அறிவிப்பு! samugammedia

யாழ் போதனா வைத்தியசாலையினால் முன்னெடுக்கப்பட்டுவரும் இலவச கண்புரை சத்திரசிகிச்சைக்கான நோயாளர்களை தெரிவு செய்யும் கண்பரிசோதனை முகாம் வரும் சனிக்கிழமை(16) இடம்பெற உள்ளதாக யாழ் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் யாழ்ப்பாணம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் வசிக்கும் கண்புரை சத்திரசிகிச்சை செய்யவேண்டிய நோயாளர்களைத் தெரிவு செய்யும் இலவச கண்பரிசோதனை முகாம் எதிர்வரும் 16.09.2023 சனிக்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் யாழ்ப்பாணம் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குரிய பொம்மைவெளி கிளினிக் நிலையத்தில் இடம்பெறவுள்ளது.

அதேபோன்று நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினைச் சேர்ந்த கண்புரை சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டிய  நோயாளர்களைத் தெரிவுசெய்யும் இலவச மருத்துவ முகாம் எதிர்வரும் 16.09.2023 சனிக்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் செங்குந்தா இந்துக்கல்லூரியில் நடைபெறவுள்ளது.

முகாமில் கண்புரை சத்திரசிகிச்சைக்குத் தெரிவு செய்யப்படும் நோயாளர்களுக்கான சத்திரசிகிச்சை மேற்கொள்ளும் திகதி பின்னர் அவர்களுக்கு அறியத்தரப்படும்.

கண்புரை சத்திரசிகிச்சைக்கு தெரிவு செய்யப்படும் நோயாளர்களை அந்தந்தப் பிரதேசத்திற்குரிய வைத்தியசாலைகளில் இருந்து யாழ் போதனா வைத்தியசாலைக்கு அழைத்து வருவதற்கும், சத்திரசிகிச்சை முடிவடைந்த பின்னர் மீண்டும் யாழ் போதனா வைத்தியசாலையில் இருந்து அவர்களது பிரதேசத்திலுள்ள வைத்தியசாலைக்கு கூட்டிச்செல்வதற்கான போக்குவரத்து வசதிகள் சுகாதார திணைக்களத்தினரால் இலவசமாக மேற்கொள்ளப்படும்.

எனவே கண்புரை சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டிய தேவையுடைய நோயாளர்கள் மேற்படி பரிசோதனை முகாமில் கலந்து கொண்டு தங்களது பெயர்களைப் பதிவுசெய்யுமாறு யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *