குற்றவாளிகள் எவராக இருப்பினும் தப்ப முடியாது – அரசைக் கவிழ்க்க முடியாது – ரணில் சூளுரை! samugammedia

“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் புதிதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இங்கு இரண்டு வழிகளில் விசாரணைகள் இடம்பெறவுள்ளன. அந்த விசாரணைகள் சுயாதீனமாக இடம்பெற அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பார்கள் என்று நம்புகின்றேன். விசாரணைகளின் முடிவின் பிரகாரம் குற்றவாளிகள் எவராக இருப்பினும் அவர்கள் தப்பிக்க முடியாது.”

இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

கியூபா மற்றும் அமெரிக்காவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று அதிகாலை நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றார். அதற்கு முன்பாக நேற்றுமுன்தினம் பிற்பகல் ஆளும் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் சிலரை அவர் சந்தித்து உரையாடியபோதே மேற்கண்டவாறு கூறினார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நான் நாட்டின் தலைவர். நாட்டுக்கும் அரசுக்கும் அபகீர்த்தி ஏற்பட ஒருபோதும் இடமளியேன். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் புதிதாகக் குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்ட தரப்பினர் தங்கள் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். அது அவர்களின் கருத்துச் சுதந்திரம். அதில் நான் தலையிடமாட்டேன். எனினும், அந்தக் குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் ஒருவரின் தலைமையில் குழுவொன்றை நியமிக்கவுள்ளேன். அதேவேளை, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்றும் நியமிக்கப்படவுள்ளது. இந்த இரு குழுக்களின் விசாரணை அறிக்கைகளும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். இதில் ஒளிவுமறைவு எதுவும் இருக்காது.

இந்த விவகாரத்தைக் கையிலெடுத்து அரசுக்கு எதிராக எதிரணிகள் அரசியல் செய்கின்றன. எந்த நடவடிக்கையாலும் இந்த அரசைக் கவிழ்க்க முடியாது.

அன்று சர்வதேச விசாரணைக்கு எதிராகக் கோஷம் எழுப்பிய ஒருசில தரப்பினர், இன்று சர்வதேச விசாரணை வேண்டுமெனக் கோருவது வேடிக்கையாகவுள்ளது. எந்த விசாரணை நடந்தாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்.” – என்றார்.

Leave a Reply