“ஜி77+ சீனா” உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக கியூபாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கியூபா ஜனாதிபதி மிகுவல் டியாஸ்-கனெல் பெர்முடெஸை உத்தியோகபூர்வமாக சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பு இலங்கை நேரப்படி நேற்று (14) பிற்பகல் கியூபாவில் உள்ள “புரட்சியின் அரண்மனை” யில் இடம்பெற்றது.
இதன் போது து அங்கு சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை கியூபா ஜனாதிபதி அன்புடன் வரவேற்றதுடன், இலங்கை ஜனாதிபதிக்கு இராணுவ மரியாதையும் அளிக்கப்பட்டது.
இதன்போது சுமூகமான உரையாடலுக்குப் பிறகு இரு தலைவர்களும் இருதரப்பு பேச்சுவார்த்தையில் இணைந்து கொண்டனர்.கியூபாவுக்கு விஜயம் செய்துள்ள இலங்கை ஜனாதிபதியை கௌரவத்துடன் வரவேற்பதாக குறிப்பிட்ட கியூபா ஜனாதிபதி, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவின் பெறுமதி பற்றியும் நினைவு கூர்ந்தார்.
மேலும் கடந்த காலங்களில் இலங்கைக்கும் கியூபாவிற்கும் இடையிலான பலமான சர்வதேச ஒத்துழைப்பை நினைவு கூர்ந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கியூபாவிற்கு எதிரான தடைகளை நீக்குமாறு கோரும் ஐ.நா தீர்மானத்திற்கு இலங்கை எப்போதும் ஆதரவளித்து வருவதாகவும், மனித உரிமைகள் தொடர்பில் கியூபா பலதரப்பு தளங்களில் இலங்கைக்கு ஆதரவளித்ததையும் நினைவு கூர்ந்தார்.
எதிர்காலத்தில், சுகாதாரம், விவசாயம் மற்றும் விளையாட்டு ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் நீண்ட நேரம் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
உலகளாவிய ரீதியில் வடக்கு மற்றும் தென்பிராந்திய நாடுகளுக்கு இடையில் விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம் ஆகிய துறைகளில் நிலவும் இடைவெளியைக் குறைப்பது குறித்தும் தலைவர்கள் கவனம் செலுத்தியதுடன், சுகாதாரத் துறை தொடர்பான நிபுணத்துவ அறிவைப் பகிர்வது குறித்தும் ஆராய்ந்தனர்.
சர்வதேச விவகாரங்களில் கியூபாவுக்கு இலங்கை ஆதரவளிக்கும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டதோடு, மனித உரிமை தொடர்பான பிரேரணைகளில் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக கியூபா ஜனாதிபதி உறுதியளித்தார்.
மேலும், அடுத்த வருடம் இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விடுத்த அழைப்பை கியூபா ஜனாதிபதி ஏற்றுக் கொண்டார்.
குறித்த சந்திப்பின் போது வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன, கியூபாவுக்கான இலங்கை தூதுவர் லக்சித்த ரத்நாயக்க, வெளிவிவகார அமைச்சின் ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான பலதரப்பு அலுவல்கள் பிரிவுப் பணிப்பாளர் நாயகம் ரேகா குணசேகர, ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் செண்ட்ரா பெரேரா ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.