ஹட்டன் குயில்வத்தை பகுதியில் அமைக்கப்படவுள்ள மதுபானசாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து தோட்டத் தொழிலாளர்கள் பாரிய போராட்டமொன்றை குயில்வத்தையில் நேற்று முன்னெடுத்தனர்.
ஹட்டன் குயில்வத்தை பகுதியில் மதுபானசாலை அமைப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கு மக்கள் தொடர்ச்சியாக கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மலையக மக்கள் முன்னணி தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வீ.இராதாகிருஸ்ணன் வேண்டுகோளிற்கு இணங்க மலையக மக்கள் முன்னணியின் ஆதரவாளர்கள் இந்த எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
மலையக மக்கள் முன்னணியின் மகளிர் அணி பிரதி தலைவியும் அம்பகமுவ பிரதேச சபையின் உறுப்பினர் சுவர்ணலதா இலங்கேஸ்வரன் உட்பட பல தொழிலாளர்கள் இப்போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
”பகுதியில் பாடசாலை, ஆலயம் மற்றும் அதிகமாக பொதுமக்கள் நடமாடும் இடம் என்பதால் இங்கு மதுபானசாலையை அமைத்தால் முழு பகுதியும் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் நிலை உருவாகும்.
எனவே, இப்பகுதியில் மதுபானசாலையை முன்னெடுக்க விடமாட்டோம். இதற்கு சரியான தீர்வு கிடைக்காவிட்டால் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும்” போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கடும் எச்சரிக்கையை விடுத்தனர்.