மன்னார் வலயக்கல்வி பணிமனைக்குட்பட்ட தாராபுரம் அல்மினா மகா வித்தியாலயத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட அதிபருக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதே நேரம் அதிபர் தகுதியை பூர்த்தி செய்து நேர்முக தேர்வில் கலந்து கொண்ட தாராபுரம் கிராமத்தை சேர்ந்த அதிபரை நியமிக்குமாறு கோரி அப்பகுதி மக்களால் இன்றைய தினம்(18) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மன்னார் தாராபுரம் அல்மினா பாடசாலைக்கு முன்பகுதியில் உள்ள வீதியில் காலை 7.45 தொடக்கம் 8.30 மணிவரை ஊர்மக்கள் பலர் இணைந்து பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு குறித்த அதிபர் நியமனத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறிப்பாக , மன்/அல்மினா பாடசாலையில் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பெறுபேறுகள் தொடர்சியாக சரிவு நிலையில் காணப்படுவதாகவும் பாடசாலையின் பழைய மாணவர் சங்கமும் பாடசாலை அபிவிருத்தி சங்கமும் தங்களது பதவி காலம் நிறைவடைந்தும் பாடசாலையின் நிர்வாகத்தில் இருந்து விலகாதிருப்பதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சுமத்துகின்றார்கள்.
அதே நேரம் புதிய அதிபர் நியமனத்திலும் பதவி காலம் நிறைவடைந்தும் நிர்வாகத்தில் இருக்கும் பழையமாணவர் சங்கம் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் தலையீடு காரணமாகவே தகுதி வாய்ந்த தங்கள் கிராமத்தை சேர்ந்த அதிபர் நியமிக்கப்படவில்லை எனவும் இது தொடர்பில் தாங்கள் எழுத்து மூல மகஜர் ஒன்றினை உயர் அதிகாரிகளுக்கு கையளித்ததாகவும் குறித்த மகஜர் தொடர்பில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்திருந்தனர்.
எனவே குறித்த பிரச்சினையில் மன்னார் வலய கல்வி பணிமனை மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தலையீடு செய்து தாரபுரமக்களின் விருப்பத்தின் படி தமது கிராமத்திற்கு தமது கிராமத்தை சேர்ந்த அதிபரை நியமிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.