மாற்றுத்திறனாளிகளை வலுவூட்டுவதன் மூலம் நாட்டின் உற்பத்திப் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு அவர்களின் பங்களிப்பை பெற்றுக்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவல் தெரிவித்தார்.
மேலும், நாட்டில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளினதும் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக புதிய சட்டமூலமொன்றை இவ்வருடம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (19) நடைபெற்ற ஊடக சந்திப்பில் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவல் இதனைத் தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவல்,
“இந்த நாட்டின் மக்கள் தொகையில் சுமார் 4% பேர் மாற்றுத்திறனாளிகளாக இருக்கின்றனர். அவர்களுக்கு நிதியுதவி மற்றும் ஏனைய வசதிகளை வழங்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், தொழில்நுட்பம் மூலம் அவர்களை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டின் உற்பத்திப் பொருளாதாரத்திற்கும் அவர்களின் பங்களிப்புகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் கல்வி மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.
அதற்குத் தேவையான தொழில்நுட்பம் மற்றும் பாடசாலை வசதிகளை வழங்குவதும் அவசியம். மாற்றுத்திறனாளிகள் என்று அவர்களை வேறுபடுத்திப் பார்க்காமல் ஏனையவர்களுடன் இணைத்து இந்தத் திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
சைகை மொழிச் சட்டம் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட மொழியாகும். எனவே இந்த மொழியை அனைவராலும் அடையாளம் காணக் கூடிய வகையிலும், கருத்துகளை பரிமாறிக்கொள்ளும் வகையில் தொடர்பாடல்களை ஏற்படுத்த மாற்றுத்திறனாளிகள் செயலகம் மூலமாக, சைகை மொழி சட்ட மூலத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் திருத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் தங்கள் வீடுகளுக்குள் அடைத்து வைக்கப்படக்கூடாது. அவர்களும் சமூகத்தில் சமமாக பழகுவதற்குத் தேவையான சூழலைத் தயார் செய்ய வேண்டும். அவர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். அரச சேவை மற்றும் தனியார் சேவையில் அவர்களின் பங்களிப்பைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும் திட்டத்திற்கு மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பும் தேவை.
நாட்டின் உற்பத்திப் பொருளாதாரத்திற்கு அவர்களையும் பங்கேற்கச் செய்ய முடியும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு தேசமாக வலுவடைந்து நாட்டின் உற்பத்திப் பொருளாதாரத்தை உயர்த்த வேண்டிய நேரம் வந்துவிட்டது.” என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.