இதுவரை வெளிவராத உண்மைகளை வெளியிடுவேன்! பிள்ளையானை கடும்தொனியில் எச்சரித்த ஹக்கீம்! samugammedia

இதுவரை வெளிவராத பல விடயங்களை என்னாலும் கூற முடியும் என  பிள்ளையான் என அழைக்கப்படும் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனைப் பார்த்து, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் கடும் தொனியில் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் குறித்த விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பில் பாதுகாப்பு பிரிவினர் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெளிவுப்படுத்தும் நிகழ்வொன்றினை நடத்தியிருந்தனர்.

இந்த நிகழ்வின்போதே, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமிற்கும் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கும் இடையில் கடும் வாய்த்தர்க்கம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் குறித்து விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பில் நேற்றும்(20) இன்றும்(21) நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்துவதற்கு இதற்கு முன்னர் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.

இதற்கு இணையாக நீண்ட தெளிவுப்படுத்தலொன்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் தலைமையில் நாடாளுமன்னறக் குழு அறையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் இடம்பெற்றிருந்தது.

பொலிஸ் பயங்கரவாத தடுப்புப் பிரிவின் பிரதானி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரசன்ன அல்விஸ், இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விடயங்களை முன்வைத்து விளக்கமளித்தார்.

அப்போது அவரிடம் கேள்வியொன்றை எழுப்பிய சந்திரகாந்தன், சஹ்ரானின் தம்பி ரிழ்வான் சம்பவமொன்றில் காயமடைந்து வைத்தியசாலையில் தங்கியிருந்தபோது ரவூப் ஹக்கீம் அவரை சென்று சந்தித்தமை உட்பட பல விடயங்கள் இந்த விசாரணைகளில் உள்ளனவா என்று கேள்வி எழுப்பியதுடன் அவ்வாறு இல்லாவிடின் அவற்றை விசாரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

இதனால் சினமடைந்த முஸ்லிம் காங்கிஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், இந்த விடயங்களுடன் தொடர்பில்லாத விடயங்களை பேச வேண்டாம் எனக் கூறியதுடன் அப்படியானால் இதுவரை வெளிவராத பல விடயங்களை தம்மாலும் கூற முடியும் என்று கடுந்தொனியில் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து இருவருக்கும் கடுமையான வாய்த்தர்க்கம் இடம்பெற்றது. ஆளுங்கட்சி எம்.பிக்கள் பலர் இருவரையும் கட்டுப்படுத்தி அமைதிப்படுத்தியதை அடுத்து அந்த கூட்டம் தொடர்ந்தது.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளை ஆதாரபூர்வமாக எம்.பிக்களுக்கு பாதுகாப்பு உயரதிகாரிகள் விளக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *