ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை முன்றிலில் எதிர்ப்புப் போராட்டத்துக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
ஐக்கிய நாடுகள் பொது சபையின் 78 ஆவது கூட்டத்தொடர் நியூயோர்க்கில் நடந்துவரும் நிலையில் இன்று இரவு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரை நிகழ்த்தவுள்ளார்.
இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் காரணம் என வலியுறுத்தியே வட அமெரிக்க தமிழ் மக்களை அணி திரளுமாறு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
“ஐ.நா பொதுச்சபை கூட்டத்தொடரில் பங்கேற்று உரையாற்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியூயோர்க் வந்தடைந்துள்ளார்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது சொந்தங்கள் அனைவரும் கொல்லப்பட்டுவிட்டனர் எனக் கூறிய ரணிலே இன்று இனப்படுகொலையாளிகளான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச, இராணுவத் தளபதிகள் மற்றும் புலனாய்வாளார்கள் உட்பட அனைவரையும் பாதுகாப்பதற்காகப் பதவியில் அமர்ந்து செயற்படுகின்றார்.
தற்போதைய ஜனாதிபதி ரணிலின் ஆட்சியிலேயே வடகிழக்கில் பெளத்த மயமாக்கலும், சிங்களக் குடியேற்றமும் தீவிரமாக இடம்பெறுகின்றன.
தியாக தீபம் திலீபனின் நினைவு ஊர்தியை அடித்து நொருக்குமாறும், தமிழர்களை அடித்துக் கொல்லுமாறும் உத்தரவு பிறப்பித்தவர் இன்று அமெரிக்காவில் உரையாற்றுவதை எம்மால் வேடிக்கை பார்க்க முடியாது.
எம் மக்களின் உரிமைகளை பறித்தெடுத்த ரணிலுக்கு எதிராக ஐ.நா. முன்றில் அணிதிரள்வோம்” – என்றும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.