நல்லாட்சி காலத்தில் மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி பாராளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேன நேற்று பாராளுமன்றத்தில் கருத்து வெளியிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தாக்குதலுக்கு முன்னதாக பாதுகாப்புச் சபையை அழைக்குமாறு தாம் கோரவில்லை என்ற கூற்றை முற்றாக நிராகரிப்பதாக தெரிவித்தார்.
தன்னிடம் அவ்வாறான கோரிக்கை எதுவும் முன்வைக்கப்படவில்லை என தாம் தெளிவாகக் கூறியதாக அவர் குறிப்பிட்டார்.
அப்போது சபாநாயகராகச் செயற்பட்ட கரு ஜயசூரியவிடம் கோட்பாட்டு ரீதியில் பிரதமருடன் இணைந்து செயற்பட முடியாத நிலையில் 4 நாட்கள் பேசியதாகவும் மைத்திரிபால சிறிசேன
கூறினார்.
கரு ஜயசூரிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் தனது வீட்டுக்கு வந்து தான் பிரதமர் பதவியை ஏற்கப் போவதில்லை எனக் கலந்துரையாடியதாகவும் ரணில்
விக்கிரமசிங்கவுடன் தொடர்ந்து பணியாற்ற சம்மதித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவையும் பிரதமர் பதவியை ஏற்று தன்னுடன் இணைந்து செயற்படுமாறு அழைப்பு விடுத்ததாகவும், ஆனால் அது தனக்கும்
பிடிக்கவில்லை எனவும் மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டினார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் இரண்டாவது மற்றும் மூன்றாவது தலைவர்களிடம் பல தடவைகள் பிரதமர் பதவியை ஏற்குமாறு கோரிக்கை விடுத்தும் அதற்கு அவர்கள் உடன்படாத நிலையிலேயே மஹிந்தவை பிரதமராக நியமிக்க நேரிட்டதாக முன்னாள் ஜனாதிபதி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.