அதிவேகமாக பரவிவரும் ‘பி.ஏ.2’ வைரஸ்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

ஒமிக்ரோனிலிருந்து உருமாறிய பி.ஏ.2 வகை வைரசால், மீண்டும் உலகளவில் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

இது குறித்து, உலக சுகாதார அமைப்பின், கோவிட் தொற்று குறித்து ஆய்வு செய்யும் தொழிநுட்பக்குழுவின் தலைவர் மரியா வான் கெர்கோவ் நேற்று தெரிவிக்கையில்,

”கோவிட் தொற்று தொடர்ந்து பரவி வருகிறது. இந்நிலையில் ஒமிக்ரோன் தொற்றிலிருந்து ‘பி.ஏ.1 – பி.ஏ.1.1 – பி.ஏ.2 மற்றும் பி.ஏ.3 எனப் பல துணை வைரஸ்கள் உருவாகி உள்ளன. அவற்றை நாங்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம்.

பெரும்பாலானோர், பி.ஏ.1 வகை வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல், பி.ஏ.2 வகை வைரசால் தற்போது அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதர வகைகளைக் காட்டிலும், பி.ஏ.2 வகை வைரஸ் அதிவேகமாகப் பரவி வருகிறது.

பி.ஏ.1 வகையை விட, பி.ஏ.2 வகை கொடியது என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. எனினும், அதன் தீவிரத்தை உணர, அதை நாங்கள் கண்காணித்து வருகிறோம்.

ஒமிக்ரோன் வகை வைரஸ் குறைந்த பாதிப்பு தரக்கூடியது எனக்கூற இயலாது; எனினும், டெல்டாவை விட அது சற்று குறைவாகப் பாதிப்பு தரக்கூடியது தான்.

ஒமிக்ரோனால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதிக உயிரிழப்புகளும் பதிவாகிறது. எனவே நாம் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்” என வலியுறுத்தியுள்ளார்.

உலகம் முழுதும், மூன்றாம் அலைக்கு வழிவகுத்த, ஒமிக்ரோன் வகை கோவிட் தொற்றின் பரவல் தற்போது குறைந்து வரும் நிலையிலும் பி.ஏ.2 வைரஸ் அதிவேகமாகப் பரவிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *