நீதிபதிக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலை கண்டிக்கும் நாளைய பொது முடக்கத்திற்கு யாழ்ப்பாணம் முஸ்லிம் மக்களும் ஆதரவு! samugammedia

முல்லைத்தீவு நீதிபதி டீ.சரவணராஜா அவர்களுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் நடவடிக்கையை கண்டிக்கும் வகையில் தமிழ் அரசியல் கட்சிகளால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நாளைய (20) பூரண கதவடைப்பு பொது முடக்கத்திற்கு யாழ்ப்பாணம் முஸ்லிம் வர்த்தகர்கள் உள்ளிட்ட முஸ்லிம் மக்களும் முழுமையான ஆதரவைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.

அவர்கள் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர். 

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

நீதிபதிக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் நடவடிக்கையானது உண்மையில் நீதித்துறைக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் நடவடிக்கை மட்டுமன்றி ஜனநாயகத்தின் மிகப் பிரதான தூண்களில் ஒன்றான நீதித்துறை சுதந்தித்தினையும் கேள்விக்குட்படுத்துகின்றது. இந் நடவடிக்கையினை நாம் வண்மையாக கண்டிக்கின்றோம்.

தமது சுயநல அரசியல் இலாபத்திற்காக வடக்கு கிழக்கு வாழ் தமிழ் பேசும் மக்களை கூறுபோட நினைக்கும் சக்திகளால் இது போன்ற பல்வேறு நடவடிக்கைகள் கடந்த காலங்களில் இருந்து தொடர்ச்சியாகவே இடம்பெற்று வருகின்றது. அவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்கள் ஒரு மித்த குரலில் ஒன்றினைந்து நாளைய 20ஆம் திகதிய கடையடைப்பு நடவடிக்கையில் ஒன்றுபடுவோம்.

நீதித்துறை சுதந்திரத்திற்கு நீதி கோருவதுடன், வடக்கு கிழக்கு வாழ் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் கட்டவிழ்த்துவிடப்படும்  இது போன்ற சதித்திட்டங்களையும் தமிழ் பேசும் மக்கள் ஒன்றினைந்து எதிர்கொண்டு முன்னோக்கிய பயணத்தை தொடர்ந்து முன்னெடுத்து செல்வோமாக என்று இத் தருணத்தில் பகிரங்கமாக அழைப்பு விடுக்கின்றோம்.

நாம் “தமிழ் பேசும் மக்களாக” தொடர்ந்தும் முன்னோக்கி பயணிப்போம் என்பதை நாளை பொது முடக்கத்தில் ஒன்றினைவதன் ஊடாக உறுதிப்படுத்துவதுடன், பொது முடக்கத்தில் ஒன்றித்து நிற்கும் தமிழ் முஸ்லிம் மக்களின் ஒருமித்த நிலைப்பாடு வடக்கு கிழக்கு வாழ் தமிழ் – முஸ்லிம் மக்களை ஒருபோதும் பிரித்து கூறுபோட முடியாது என்பதை பகிரங்கமாக அரசுக்கும், சர்வதேசத்திற்கும் வெளிப்படுத்தி நிற்கும் என்பதில் ஐயமில்லை – என குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *