1990 களில் இடம்பெயர்ந்து புத்தளத்திற்கு சென்ற வடக்கு முஸ்லிம் மக்களுக்கு உதவிபுரிந்த புத்தளம் மாவட்ட முஸ்லிம் நிறுவனங்கள் மற்றும் மாவட்ட உலமாக்கள், பொதுமக்கள் சார்பில் இருவர் மன்னாரில் இடம்பெற்ற தேசிய மீலாத் விழாவில் இன்று கௌரவிக்கப்பட்டனர்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தினாரால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட வடக்கு முஸ்லிம் மக்கள் அதிகமானோர் புத்தளம் மாவட்டத்திற்கு இடம்பெயந்தனர்.
உடுத்திய உடையுடன் தமது சொந்த மண்ணை விட்டு வெளியேறி புத்தளத்திற்கு வந்த வடக்கு முஸ்லிம்களை, புத்தளம் மக்கள் அன்போடு வரவேற்று, அந்த மக்களுக்கு தேவையான அத்தனை உதவிகளையும் வழங்கி வடக்கு முஸ்லிம் மக்களை கௌரவப்படுத்தினார்கள்.
இவ்வாறு வடக்கு முஸ்லிம் மக்களை அரவணைத்து அவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படைத் தேவைகளையும் வழங்கி கௌரவித்த புத்தளம் மக்களை கௌரவிக்க வேண்டும் என தேசிய மீலாத் விழா தொடர்பான சிறப்புக் கலந்துரையாடலில் தீர்மானம் எடுக்கப்பட்ட நிலையில் இந்த கௌரவிப்பு இடம்பெற்றது.
இதன் அடிப்படையில் இன்று மன்னார் முசலி தேசியப் பாடசாலை மைதானத்தில் இடம்பெற்ற தேசிய மீலாத் விழாவில் வடக்கு முஸ்லிம் மக்களுக்கு உதவிய முழுப் புத்தளம் மாவட்ட மக்களையும், மஸ்ஜித் நிர்வாகிகளையும், உலமாக்களையும் கௌரவிக்கும் நோக்கில் அவர்கள் சார்பில் இருவர் கௌரவிக்கப்பட்டனர்.
புத்தளம் மாவட்ட முஸ்லிம் நிறுவனங்கள், மஸ்ஜித் சம்மேளனங்கள் சார்பில் புத்தளம் மாவட்ட மஸ்ஜித் சம்மேளனங்களின் தலைவர் முஹம்மட் பஸால் ஹாஜியாரும், புத்தளம் மாவட்ட மக்கள் மற்றும் உலமாக்கள் ஆகியோர் சார்பில் மூத்த உலமாவும், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் புத்தளம் கிளை தலைவருமான அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிமும் இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் கௌரவிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்வில் புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, வடக்கு ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், பாராளுமன்ற உறுப்பினர் கே.திலீபன், புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபதிரன, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஏ.எம்.பைசல் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.