வி.எஸ்.சிவகரனிடம் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் சுமார் 5 மணித்தியாலங்கள் விசாரணை!

தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரனிடம் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவின் கொழும்பிலுள்ள கிருலப்பனை அலுவலகத்தில் நேற்று(வெள்ளிக்கிழமை) சுமார் 5 மணித்தியாலங்கள் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த விசாரணைகளின் போது தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் செயற்பாடுகள் தொடர்பிலும் கடந்த 10 ஆண்டுகளில் நடத்திய போராட்டங்கள், கூட்டங்கள் தொடர்பான பல்வேறு விதமான கேள்விகளை முன்வைத்ததாக அவர் தெரிவித்தார்.

அதில் பல கேள்விகள் வெறும் கற்பனைக் கதையாக இருந்ததாகவும் வி எஸ்.சிவகரன் குறிப்பிட்டார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள வி எஸ்.சிவகரன், “இவ்விதமாக மூன்று மாதத்திற்கு ஒரு தடவை விசாரணையை எதிர் கொள்வதாகவும், எமது ஜனநாயக ரீதியான செயற்பாட்டை சவாலுக்குட்படுத்தமுனைவது, நீதியான ஜனநாயக சட்ட ஆட்சிக்கு உகந்தவையாக தெரியவில்லை என உணர்கிறோம்.  கவலை அடைகிறோம்.

இவ்விதமாக பல சிவில் சமூக செயற்பாட்டாளர்களை தொடர்ச்சியாக விசாரணைக்கு உட்படுத்துவது என்பது சமூகத்தின் அடிப்படை நீதி பூர்வமான கருத்துரிமையும்  செயல்பாட்டையும் கேள்விக்குட்படுத்தி  அடிப்படை  வாழ்வுரிமையை வலிந்து நசுக்குவதாகவே எமக்கு புலப்படுகிறது.

அரசு சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மீதான அடக்கு முறைச் செயற்பாட்டை நிறுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *