பாலாவி முல்லை ஸ்கீம் கிராமத்தில் யாருமே இல்லாத வீடொன்றில் திருட வந்த திருடன் அந்த வீட்டில் படுத்துறங்கியதுடன் வீட்டிலிருந்த தாவணியுடன் தப்பியோடிய விசித்திரமான சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
இன்று அதிகாலை 35 வயது மதிக்கத்தக்க திருடன் ஒருவன் முல்லை ஸ்கீம் பகுதியில் நடமாடிய நிலையில் அப் பகுதியில் பொலிஸாரின் வாகனமொன்று வருவதை கண்டு முல்லை ஸ்கீம் கிராமத்தில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்துள்ளார் எனக் கூறப்படுகிறது.
குறித்த வீட்டிற்குள் அந்த வேளை யாருமே இருக்காத நிலையில் வீட்டின் சமையலறை ஊடாக நுழைந்த குறித்த திருடன் குப்பி விளக்கொன்றினை ஏற்றி வெளிச்சத்தை வரவைத்துள்ளதுடன் வீட்டிலிருந்த நுளம்பு வலையை எடுத்து தூங்குவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார். அந்த வீட்டில் இருந்த துணிகளை எடுத்து தலையணைக்காகவும் பயன்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், இன்று காலை 8 மணியளவில் திருடன் தங்கியிருந்த வீட்டில் சத்தம் ஒன்று கேட்டபோது, யாருமில்லாத வீட்டிலிருந்து சத்தம் வருவதை அயலிலுள்ளவர்கள் அவதானித்துள்ளனர்.
இது தொடர்பில் வீட்டின் உரிமையாளருக்கு தொலைபேசி ஊடாக தகவல் வழங்கியுள்ளதுடன், ஏனையோருக்கும் தெரியப்படுத்தியுள்ளனர்.
எவ்வாறாயினும், இதனை அவதானித்த திருடன் தான் அணிந்து வந்த ஆடைகளை கழற்றிவிட்டு வீட்டிலிருந்த பெண்கள் அணியும் தாவணி ஒன்றை உடுத்திய நிலையிலேயே அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இவ்வாறு தாவணி உடுத்திய நிலையில் தப்பிச் செல்லும் காட்சிகள் அந்தக் கிராமத்தின் சில வீடுகளில் பொருத்தப்பட்ட CCTV கமராக்களில் பதிவாகியுள்ளன.
இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட முல்லை ஸ்கீம் இளைஞர்களும் ஊர்மக்களும் ஒன்று சேர்ந்து தப்பியோடிய குறித்த திருடனை தேடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், பெண்கள் அணியும் தாவணியோடு தப்பியோடியதாக கூறப்படும் குறித்த திருடன், அந்த கிராமத்தின் பற்றைக்குள் பதுங்கியிருந்த நிலையில் ஊர் மக்களால் பிடக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
குறித்த திருடன் பல திருட்டு சம்பவங்களில் தொடர்புடையவர் என்றும், நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் இவர் பொலிஸாரால் தேடப்பட்டு வந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் புத்தளம் தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.