ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வின் மூலமே தமிழ் மக்கள் நின்மதியாக வாழ முடியும்….!லவகுசராசா…! samugammedia

“ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப் பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வு” கிடைக்கப் பெறும்  பட்சத்திலேயே  வடக்கு  கிழக்கு வாழ் தமிழ் மக்கள் நின்மதியாகவும் சுயமாகவும் தமக்கான அடையாளத்துடனும்  வாழ முடியும் என வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் கண்டுமணி லவகுசராசா தெரிவித்தார்.

இலங்கையில் வடக்கு கிழக்கு தமிழரின் இணைப்பாட்சி(சமஷ்டி) கோரிக்கையின் தோற்றம் தொடர்பான கண்காட்சி மற்றும் வரலாற்றுத் தெளிவூட்டல் நிகழ்ச்சியில் உரையாற்றிய போதே வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் கண்டுமணி லவகுசராசா தெரிவித்தார்.

அவர் ஆற்றிய உரை வருமாறு,

எமது வடக்கு  கிழக்கு மக்கள் கடந்த கால காலனித்துவக்  காலத்தில் இருந்து இன்றைய  சிங்கள பேரினவாத அரசின்  ஆட்சிக்  காலம்  வரை இன ஒடுக்குமுறைக்கும்  அடக்கு முறைக்கும் காலம்  காலமாக முகம்கொடுத்துக் வரும்  ஓர் இனமாக நாம் இன்று  தள்ளப்பட்டிருக்கின்றோம்.

இவ்வாறானதொரு இன ஒடுக்கு முறைக்கு  காலம் காலமாக முகம்கொடுத்துவரும் வடக்கு கிழக்கு மக்களுக்கான கௌரவமான அரசியல் தீர்வு வேண்டிய எமது 100 நாள் செயல்முனைவின் இறுதி நாளான 2022ம் ஆண்டு  நெவம்பர் மாதம் 08ம் திகதி அன்று வடக்கு கிழக்கு மக்களுக்கான அரசியல் தீர்வாக “ ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப் பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வு”  வேண்டும் எனும் மக்கள் பிரகடனம்  வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள  08 மாவட்டங்களிலும் வெளியிடப்பட்டது.

அந்த வகையில் இப்பிரகடனம் வெளியிடப்பட்டு ஓராவது ஆண்டு பூர்த்தியான இன்றைய தினம்  வடக்கு கிழக்கு மக்கள் ஒன்றிணைந்து “ இலங்கையின் வடக்கு கிழக்குத் தமிழரின் இணைப்பாட்சி(சமஷ்டி)கோரிக்கையின் தோற்றம்” எனும்   வரலாற்றுத் தெளிவூட்டலினை இங்கு அமைக்கப்பட்டிருக்கும் கூடாரங்களில் வைக்கப்பட்டிருக்கும் அரசியல் தீர்வு தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகள், உடன்படிக்கைகள், எமது  வடக்கு கிழக்கு மக்கள் இன்றுவரைக்கும் எதிர்கொண்டுவரும்  உரிமைசார் பிரச்சினைகள் உள்ளடங்கிய  கண்காட்சிகள் ஊடாக இலங்கை தேசத்திற்கும் சர்வதேசத்திற்கும் தெளிவுபடுத்துகின்றோம்.

குறிப்பாக இலங்கை தீவில்;  1948ம் ஆண்டிற்குப் பின்னரான இலங்கை சிங்கள பேரினவாத  அரசின்  இன்று வரைக்கும் சிங்கள  பேரினவாதத்தின் இனவாத அடக்கு முறைகளுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும்  உள்ளான தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு வேண்டிய போராட்டங்கள் மற்றும் சந்திப்புக்களை மேற்கொண்டதுடன் குறிப்பாக அரசியில் தீர்வு தொடர்பான ஒப்பந்தங்களையும் பேச்சுவார்த்ததைகளையும்  தமிழ் தலைவர்கள் காலனித்துவக்  காலங்களிலும் அதற்கு பின்னராக இலங்கையில்  மாறி மாறி ஆட்சிக்கு  வந்த சிங்கள அரசின் தலைவர்களுடனும் மேற்கொண்டிருந்தனர். குறிப்பாக செல்வா பண்டா ஒப்பந்தம், செல்வா டட்லி ஒப்பந்தம், இலங்கை இந்திய ஒப்பந்தம், திம்பு பிரகடனம் மற்றும் ஒஸ்லோ பேச்சுவார்த்தை என்பனவற்றை இங்கு குறிப்பிட முடியும்.

ஆனால் மேற்படி அரசியில் தீர்வு தொடர்பான பேச்சுவார்த்தைகள் மற்றும் ஒப்பந்தங்கள் அனைத்தும்  குறிப்பாக சிங்கள  தலைவர்களால்  நிராகரிக்கப்பட்டு நாம் ஏமாற்றப்பட்ட வரலாறுகளே  அதிகமாகும்.

தமிழ் மக்கள் இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வரலாற்றுக்கு முந்தைய காலம்தொட்டு பாரம்பரியமாக தமக்கேயான தனித்துவமான அடையாளத்துடன் வாழ்ந்து வந்தனர்.

இப்பிராந்தியத்தில் எண்ணிக்கைப் பெரும்பான்மையினரான தமிழ் மக்களுடன் எண்ணிக்கைச் சிறுபான்மையினரான தமிழ்பேசும் முஸ்லிம் மக்களும் வாழ்ந்து வருகின்றனர். ஆட்சிக்கு வந்த சிங்கள பெரும்பான்மை அரசுகள் தமிழ் மக்கள் மீது திட்டமிட்ட முறையில் மேற்கொண்டுவந்த இனவாத அடிப்படையிலான அரசியல், மொழி, பொருளாதார, சமூக ரீதியான அடக்குமுறைகள் மற்றும் வன்முறைகளின் காரணமாகவே வடக்கு கிழக்கு வாழ் மக்களுக்கு ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துள் மாகாண முறைமையிலான தீர்வு வழங்கப்பட வேண்டும், தமிழ் மொழியும் அரச கரும மொழியாக அரசியலமைப்பின் மூலம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என 13வது திருத்தச்சட்டத்தின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது. எனினும், 2006ல் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாண அலகு பிரிக்கப்பட்டு வடக்கும் கிழக்கும் தனித்தனி மாகாணங்களாக்கப்பட்டன.

குறிப்பாக 1987இல் மேற்கொள்ளப்பட்ட இந்திய – இலங்கை உடன்படிக்கை மூலமான 13வது திருத்தச்சட்டம் உருவாக்கப்பட்டு இற்றுடன் 36 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. இந்தக் கால இடைவெளியில் இலங்கை அரசினால் தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதுடன் தமிழர்கள் மீது போர்க்குற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. தொடர் இடப்பெயர்வு மற்றும் பலவருடகால அகதிமுகாம் வாழ்வை அனுபவித்தனர். போரினால்  இருப்பிடங்களும், சொத்துக்களும், வாழ்வாதாரங்களும் மரங்கள் உட்பட முற்றாக அழிக்கப்பட்டன. பயங்கரவாதத் தடைச்சட்டதின் மூலம் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். 

 இராணுவமயமாக்கம், திட்டமிட்ட முறையிலான நில அபகரிப்பு, தமிழ் மக்களின் மத கலாச்சார அடையாளங்கள் அழிக்கப்பட்டு சிங்கள காலனித்துவக் குடியேற்றங்கள் அதிகரித்து வருகின்ற நிலை தொடருகின்றது அத்துடன் மனித உரிமை மீறல்கள் காரணமாக பாரிய அச்சுறுத்தல்களையும்  இன்றுவரையில் தமிழ் மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர். 

மேற்படி  இன அடக்கு முறைகளுக்கும், ஒடுக்கு முறைகளுக்கும்  உள்ளாகி இருக்கும் எமது  வடக்கு கிழக்கு மக்கள் தனியான தேசியம்,தாயகம் மற்றும் சுயநிர்ணய உரிமையுடனும் வாழக் கூடிய  வகையிலான “ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப் பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வு” வேண்டும் எனும் அரசியல் தீர்வு கிடைக்கப் பெறும்  பட்சத்திலேயே  வடக்கு  கிழக்கு வாழ் தமிழ் மக்கள் நின்மதியாகவும் சுயமாகவும் தமக்கான அடையாளத்துடனும்  வாழ முடியும் என்பதில் ஐயமில்லை.

எனவே காலம் காலமாக சிங்கள பேரினவாதத்தின் இன ஒடுக்குமுறைக்கும் அடக்கு முறைக்கும் உள்ளாகி  வரும்  வடக்கு கிழக்கு தழிழ் மக்களுக்கான மேற்படி அரசியல் தீர்வு தொடர்பான  விடயத்தில் இந்திய அரசு உட்பட சர்வதேச சமூகங்களும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின்  மையக் குழு நாடுகளும்  கரிசனை செலுத்த வேண்டும் என வினயமாக வேண்டி நிற்கின்றோம் – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *