புத்தளத்தில் கடும் வெள்ளம் – 11,586 பேர் பாதிப்பு…!samugammedia

நாட்டில் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழையினால்  புத்தளம் மாவட்டத்தில் 11,586 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

வான் கதவுகள் திறக்கப்பட்டமை மற்றும் வெள்ளம் காரணமாகவே இவ்வாறு வெள்ளம் பெருகியுள்ளதாக அந்த  மாவட்ட செயலாளர் எச்.எம்.எஸ்.பி.ஹேரத் தெரிவித்தார்.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தெதுரு ஓயா, ராஜாங்கனை, இகினிமிட்டிய, அங்கமுவ, தப்போவ நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டதாலும், கடும் மழை காரணமாகவும் மாவட்டத்திலுள்ள கால்வாய்கள் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பி வழிவதாலும் பல இடங்கள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை , பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளின் தலையீட்டினால் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, புத்தளம் மாவட்டத்தில் வெள்ள அனர்த்த நிலைமை படிப்படியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படுவதாகவும் மாவட்ட செயலாளர் எச்.எம்.எஸ்.பி.ஹேரத் குறிப்பிட்டார்.

மேலும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் நேற்று (09) காலை வரை 2389 குடும்பங்களைச் சேர்ந்த 8430 பேர் தொடர்ச்சியாக அவதிப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். 

நாத்தாண்டிய, ஆராச்சிக்கட்டுவ, முந்தல், புத்தளம், மாதம்பை, வனாத்தவில்லு, மஹவெவ, தங்கொட்டுவ, கற்பிட்டி, வென்னப்புவ, பல்லம மற்றும் மஹகும்புக்கடவல ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

மேலும், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட நிலையில் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு சமைத்த உணவுகளும், வெள்ளம் காரணமாக தமது வீட்டிலிருந்து வெளியேறி உறவினர்கள் வீடுகளில் தங்கியுள்ள குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்டச் செயலாளர் தெரிவித்துள்ளார். 

குறித்த இதேவேளை, தெதுரு ஓயா வான்கதவுகள் திறக்கப்பட்டதாலும், கடும் மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினாலும் சிலாபம், அரியகம, கக்கப்பள்ளிய, மானுவன்கம, திஸ்சோகம, தெதுரு ஓயா மற்றும் தித்தக்கடை ஆகிய பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக சிலாபம் முகத்துவாரம் வெட்டப்பட்டு தேங்கி நிற்கும் வெள்ளநீரை கடலுக்குள் அனுப்பும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.

மேலும், தல்வில மற்றும் மஹாவெவ வாவி வெட்டப்பட்டதன் காரணமாக மஹாவெவ வெள்ள நிலைமை கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முந்தல் வீதியில் உள்ள வடிகான்களில் வெள்ளநீர் வழிந்தோடாமல் தேங்கி காணப்பட்டது. இதனையடுத்து, குறித்த வடிகான்கள் அவசர நடவடிக்கையின் கீழ் அவை வெட்டப்பட்டு வெள்ளநீர் வெளியேற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

அத்துடன், புத்தளம் வன்னியதீவு – தல்கஸ்கந்த கால்வாயை துப்பரவு செய்வதற்கும் , தேவையான இடங்களை ஆழப்படுத்துவதற்கும், பள்ளம தம்மன பாடசாலைக்கு அருகில் உள்ள கிராமத்தில் தேங்கி நிற்கும் நீரை வெளியேற்றுவதற்காகவும் வடிகான்கள் வெட்டப்பட்டுள்ளன.

அத்தோடு, மழை காரணமாக புத்தளம் – வனாத்தவில்லு (எலுவன்குளம்) ஊடாக மன்னார் வீதியும், முந்தல் , மதுரங்குளி –  நவகம்மான வீதியும் பாதிக்கப்பட்டுள்ளமையால் போக்குவரத்து சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, தங்கொடுவ பிரதேசத்தில் கிராவல் மேடு ஒன்று வெள்ளநீரில் அடித்துச் செல்லப்படுவதால், அந்த கிரவல் குவியலில் உள்ள கற்களால் அருகிலுள்ள வீடுகளுக்கு சேதம் ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எனினும், அதற்குத் தேவையான அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு புத்தளம் மாவட்ட செயலகத்தினால் உரிய தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply