புத்தளத்தில் தொடரும் மழை: 8861 பேர் பாதிப்பு! samugammedia

தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழையினால் வான் கதவுகள் திறக்கப்பட்டமை மற்றும் வெள்ளம் காரணமாக புத்தளம் மாவட்டத்தில் 2478 குடும்பங்களைச் சேர்ந்த 8861 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், வெள்ளம் காரணமாக மரணம் ஒன்றும் பதிவாகியுள்ளது எனவும் புத்தளம் மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.

பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளின் தலையீட்டினால் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, புத்தளம் மாவட்டத்தில் வெள்ள அனர்த்த நிலைமை படிப்படியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படுவதாகவும் மாவட்ட செயலாளர் எச்.எம்.எஸ்.பி.ஹேரத் குறிப்பிட்டார்.

அத்துடன், வெள்ளம் காரணமாக புத்தளம் மாவட்டத்தில் ஒரு வீடு முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், எட்டு வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், வர்த்க நிலையமொன்றும் வெள்ளத்தினால் சேதமடைந்துள்ளதாகவும் அறிக்கையிடப்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது.

இதேவேளை, வெள்ளநீர் வேகமாக வழிந்தோடும் கால்வாய்க்குள் வீழ்ந்து ஒன்றரை வயது பெண் குழந்தை ஒன்றும் உயிரிழந்ததாகவும் புத்தளம் மாவட்ட செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சனிக்கிழமை (04) மதுரங்குளியில் இந்த துயரகரமான சம்பவம் பதிவாகியுள்ளது.

குழந்தையின் வீட்டுக்கு அருகிலுள்ள கால்வாய்க்குள் வீழ்ந்தே குழந்தை உயிரிழந்துள்ளது.

புத்தளத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக தற்காலிக முகாம் ஒன்று அமைக்கப்பட்டிருப்பதுடன் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் அதில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்தோடு, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட நிலையில் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு சமைத்த உணவுகளும், வெள்ளம் காரணமாக தமது வீட்டிலிருந்து வெளியேறி உறவினர்கள் வீடுகளில் தங்கியுள்ள குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்டச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

புத்தளம் மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் எட்டு வான் கதவுகளும்  தப்போவ நீர்த்தேக்கத்தின் நான்கு வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் கடமை நேர அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Leave a Reply