கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் பணிப்புரைக்கு அமைய ஆளுநர் பொதுமக்கள் குறைகள் சேவை 24மணி நேரமும் தனது செயற்பாட்டை வழங்கி வருகிறது.
கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமான் பதவியேற்றதன் பின் கிழக்கு மாகாண சபையில் ஆளுநர் பொதுமக்கள் குறைகேள் பிரிவு 24 மணிநேரமும் செயற்பட்டு வரும் நிலையில் நான்கு உத்தியோகத்தர்கள் கடமையாற்றி வருகின்றனர்.
பொதுமக்களிடம் இருந்து வரும் தொலைபேசி அழைப்புக்கள் மற்றும் இணையத்தள முறைப்பாடுகள் உடனடியாக பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் மற்றும் அமைச்சுக்களுக்கு அனுப்பப்பட்டு முறைப்பாட்டாளருக்குரிய பதில்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
ஆனால் வடமாகாணத்தைப் பொறுத்தவரை ஆளுநர் பொதுமக்கள் சேவை வினைதிறனாக இல்லை என்பது பலரது கருத்தாக உள்ளது.
வடக்கு ஆளுநரின் பொதுமக்கள் சேவை ஒவ்வொரு புதன்கிழமையும் இடம்பெறும் என முன்னர் அறிவிக்கப்பட்ட நிலையிலும் பெரும்பாலான புதன்கிழமைகள் ஏதோ ஒரு காரணத்தை கூறி நிறுத்தப்படுவதாக கூறப்படுகிறது.
பொது மக்கள் புதன்கிழமைகளில் சேவை இடம்பெறும் என ஆளுநர் செயலகத்துக்கு வருகை தரும் சந்தர்ப்பங்களில் இன்று சேவை இடம்பெறாது. தொலைபேசி மூலம் அறிந்து விட்டு வாருங்கள் என திருப்பி அனுப்பப்படும் சம்பவங்கள் இடம்பெறுகிறது.
அது மட்டும் அல்லாது ஆளுநர் செயலக தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளும்போது ஆளுநரை சந்திப்பதற்கான திகதி நேரம் தருமாறு கேட்கப்பட்டாலும் தொலைபேசி இலக்கத்தை தாருங்கள் அழைப்பு எடுக்கிறோம் என கூறியும் இதுவரை அழைப்பு கிடைக்கவில்லை என்பது பலருடைய குற்றச்சாட்டாக உள்ளது.
இவ்வாறான நிலையில் வடக்கு கிழக்கு ஆளுநர்கள் இருவரும் அண்மையில் ஒரே நாளில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.