உடப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பள்ளிவாசல்பாடு பிரதேசத்தில் வயோதிபர் ஒருவர் இன்று(14) நண்பகல் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
முந்தல் – பள்ளிவாசல்பாடு பகுதியைச் சேர்ந்த 60 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தனிமையில் வாழ்ந்து வந்த வயோதிப தம்பதிகளான கணவன் மற்றும் மனைவிக்கு இடையே இடம்பெற்ற வாக்குவாதம் முற்றிய நிலையில் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கைகலப்பை அடுத்தே, குறித்த நபர் வீட்டின் சமையலறையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்த நபர் நீண்ட காலமாக சக்கர நாற்காலியில் வாழ்ந்து வந்தவர் எனவும், அவரது மனைவி கண்பார்வை குறைந்தவர் எனவும் கூறப்படுகிறது.
குறித்த வயோதிப தம்பதிக்கு இடையில் இடம்பெற்றதாக கூறப்படும் கைகலப்பில், உயிரிழந்த நபரின் மனைவியான வயோதிப பெண் இரத்தக் காயங்களுடன் புத்தளம் தள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு வருகை தந்த உடப்பு பொலிஸாரும், பொலிஸ் தடயவியல் பிரிவினரும் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.
அத்துடன், சம்பவ இடத்திற்கு இன்று மாலை விஜயம் செய்த புத்தளம் மாவட்ட பதில் நீதிவான் எம்.எம்.இக்பால் , நீதிவான் விசாரணையை மேற்கொண்ட பின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
உயிரிழந்த வயோதிபரின் சடலம் புத்தளம் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் உடப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.