இலங்கை மனிதர்களுக்கு மாத்திரமன்றி விலங்குகளுக்கும் வாழ முடியாத நாடாக ஆட்சியாளர்கள் மாற்றியுள்ளனர் என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மஹரகம இளைஞர் சேவை மன்ற கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கார்த்திகை வீரர்கள் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
‘நமது நாடு முற்றிலும் அரசியல் சுரண்டலுக்கு பலியாகி வருகிறது. இதற்கான வலுவான அடித்தளத்தையிட்டது 1977ல் ஆட்சிக்கு வந்த ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் அரசாங்கமாகும்.
தேசிய மக்கள் சக்தி இந்த அழிவுப் போக்கிற்கு எதிராக பொது சமூகத்தின் சுதந்திரத்திற்காக அச்சமின்றி இயங்கி வந்தது.
1989ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13ஆம் திகதி, பொது மக்களின் வழிகாட்டுதலில்தான் ஜே.வி.பி கட்டியெழுப்பப்பட்டது. ஆனால், எமது கட்சியின் ஸ்தாபகரான ரோஹன விஜேவீர உட்பட பெருமளவிலான தோழர்கள் கொல்லப்பட்டனர்.
ஜே.ஆர் ஜெயவர்த்தன தான் இந்த கலாசாரத்தை தொடக்கி வைத்தார். ஒரு மாற்றத்திற்காக சந்திரிகாவை கொண்டுவந்தார்கள். மாற்றத்திற்காக கொண்டுவரப்பட்ட எந்தவொரு தலைவரும் மாற்றத்தை கொண்டு வரவில்லை.
உலகில் எங்காவது மோசடி மற்றும் ஊழல் பற்றிய விடயங்கள் அம்பலப்படுத்தப்பட்டால், அதில் தற்போது இலங்கையின் பங்குதாரர்களும் இருக்கும் இடத்திற்கு நாடு தள்ளப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.









