தமிழ் ஆயுத போராட்ட அமைப்பை பயங்கரவாதிகள் எனக் கூறிய நடிகை குஷ்பு யாழ்ப்பாணத்திற்கு வந்தால் அவருக்கு துடைப்பக் கட்டையால் ஆசிர்வாதம் வழங்கப்படும் அத்துடன் அதைவிட கழிவு பொருட்களாலும் அவருக்கு ஆசீர்வாதம் வழங்கப்படும் என அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளரும் வடக்கு மாகாண கடல் தொழிலாளர் இணையத்தின் தலைவருமான எம்.வி.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
நடிகை குஷ்பு தமிழ் ஆயுத போராட்ட அமைப்பின் போராளிகளை பயங்கரவாதிகள் என தெரிவித்திருக்கின்றார். இது ஒரு வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய விடயம். அவரது இந்த கருத்தானது எம்மவர்கள் மத்தியில் தாக்கத்தினையும் மிகுந்த ஒரு ஏமாற்றத்தினையும் தந்துள்ளது.
கடந்த காலத்தில் தமிழ் ஆயுத போராட்ட அமைப்பின் தாக்குதல்களை சமாளிக்க முடியாத இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன அவர்கள் இராணுவ உதவி கேட்டு இந்தியாவிற்கு சென்றிருந்தார்.
அந்த நேரம் இந்தியாவில் ஆட்சி செய்து கொண்டிருந்த பிரதமர் ராகுல் காந்தி அவர்கள், ஜே.ஆர். ஜெயவர்த்தன அவர்கள் தங்களை விட்டு வேறு நாடு அதாவது குறிப்பாக சீனாவிற்கு சென்று விடக்கூடாது என்ற வகையில், எங்களது நலனையும் கருத்தில் கொள்ளாது சிங்கள மக்களின் நலனை கருத்தில் கொண்டு அவர் கேட்ட ரகசிய உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கு ஒப்புக்கொண்டார்.
அந்த வகையிலே அவர் இலங்கைக்கு வந்து விமான நிலையத்தில் இறங்கும் பொழுது சாதாரண சிங்கள சிப்பாய் ஒருவர் அவரது பிடரியில் அடித்து அவரை அவமானப்படுத்தி கொலை செய்வதற்கு முயற்சி பண்ணினார் அது ஒரு அவமானமாக முடிந்தது. அதையும் தாங்கிக் கொண்டு மறைமுகமாக சென்று ஒரு இரகசிய ஒப்பந்தத்திலே கைச்சாத்திட்டு விட்டு சென்றிருக்கின்றார்.
நேரிலே வந்து செய்ய முடியாத இந்திய பிரதமர் அவர்கள் மறைமுகமாக அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் எங்களுக்கு உதவி செய்வதாக காட்டி அங்கிருந்து எங்களுக்கு உணவுப் பொதிகளை போடுவதாக பாசாங்கு செய்து, எங்களுக்கு அமைதியை ஏற்படுத்தப் போவதாக ஒரு அமைதிப்படையை உருவாக்கி எங்களுடைய நாட்டுக்குள்ளே அனுப்பி வைத்து, எங்களது தேசியத் தலைவரை டில்லிக்கு அழைத்து அங்கே அவரை அடைத்து வைத்து வற்புறுத்தி அந்த ஒப்பந்தத்திலே கையெழுத்து வாங்கினர்.
எங்களுடைய நாட்டுக்குள் வந்து தமிழ் ஆயுத போராட்ட அமைப்பின் ஆயுதங்களை களைந்து விட்டு அவர்களை நிராயுதபாணிகள் ஆக்கி ஜே.ஆர். ஜெயவர்த்தனவுக்கு ரகசியமாக கொடுத்த ஒப்பந்தத்தின் நடவடிக்கையை மேற்கொண்டார். அந்த ஒப்பந்தமானது தமிழ் ஆயுத போராட்ட அமைப்பினை அழித்து தருவது, தமிழ் மக்களை ஒடுக்கி அல்லது பயமுறுத்து தருவதுதான் அந்த ஒப்பந்தத்தின் சாராம்சம்.
இவ்வாறு செய்து இங்குள்ள நூற்றுக்கணக்கான யுவதிகளை கற்பழித்து, இளைஞர்களையும் கொன்று குவித்து, எங்களுடைய சொத்துக்களுக்கு நாசம் விளைவித்து, எங்களுடைய போராட்டத்தையும் நலிவடைய செய்தவர்தான் இந்த ராஜீவ் காந்தி அவர்கள்.
அப்படிப்பட்ட ராஜீவ் காந்தியை தலைவராக கொள்கின்ற இந்திய நாட்டின் நடிகை குஷ்பு அவர்கள் எங்களுடைய நாட்டுக்காகவும், தமிழ் இன மக்களுக்காகவும், விடுதலைக்காகவும் போராடிய புனிதமான போராளிகளை பயங்கரவாதிகள் என வர்ணிப்பது மிகவும் வேதனையான விடயம். இந்த விடயத்தை நாங்கள் கண்டிக்கின்றோம்.
இப்பொழுது சீனா இலங்கையில் தென்புலத்தில் இருந்து வடபுலத்தை நோக்கி தனது நகர்வுகளை மிக வேகமாக நகர்த்தி கொண்டிருக்கின்ற காரணத்தினால் இலங்கையினுடைய இனவெறி, மதவெறபிடித்த சிங்கள மக்களை மகிழ்விப்பதற்காகவும், சிங்கள ஏகாதிபத்தியவாதிகளின் சொல்லுக்கு மதிப்பளிப்பதற்காகவும், அவர்களுக்கு இந்த செயலை செய்து விட்டால் சீனாவினுடைய வருகையை குறைக்கலாம் என்ற நோக்கத்திற்காகவும், யாழ்ப்பாணம் வரவுள்ள குஷ்பு அவர்கள் இப்படி தமிழ் ஆயுத போராட்ட அமைப்பை பயங்கரவாதிகளாக சித்தரித்து கருத்து தெரிவித்துள்ளார்.
சிங்களப் பேரினவாதிகளை மகிழ்விப்பதற்காக இந்தியாவிலிருந்து இலங்கைக்கு குறிப்பாக பா.ஜ. க பிரமுகர்கள் வந்து போகின்றார்கள். அவர்கள் வந்து போகும் இந்த நோக்கமே இலங்கையை ஒட்டுமொத்தமாக தங்களுக்கு ஆதரவுடைய நாடாக வைத்திருப்பதற்கான முயற்சியாக இருக்கின்றது. அவர்களுக்குத் தெரியும் தெற்கு முழுவதும் சீனாவின் வசமாக போய்விட்டது. வடக்கில் தான் இப்பொழுது கொஞ்சம் இருக்கின்றது. அதையாவது தக்க வைத்துக் கொள்வதற்காகத்தான் இந்தியா முயற்சிக்கின்றது.
இந்த முயற்சியை முன்னெடுக்கின்ற இந்தியாவின் பிரமுகராக வருகின்ற குஷ்பு அவர்கள் வேண்டுமானால் தெற்குக்கு போய் ஆதரவையும் இலங்கையினுடைய அரவணைப்பையும் கோரலாமே தவிர, புனித வேள்வி நடந்த பூமியிலே அதுவும் யாழ்ப்பாண மண்ணிலே கால் வைக்கக் கூடாது. அப்படி கால் வைத்தால் கண்டிப்பாக அந்த மண் மாசடையும்.
எனவே இலங்கைக்கான விஜயத்தை தெற்கு விஜயமாக மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லையேல் இந்தியாவிலிருந்து குஷ்பு இலங்கைக்கு வருவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லாமல் அதையும் தாண்டி அவர் இங்கே வருவாராக இருந்தால், குறிப்பாக யாழ்ப்பாணத்திற்கு வருவாராக இருந்தால் இங்கே உள்ள அன்னையர்கள் கண்டிப்பாக குஷ்பூ அவர்களை எதிர்ப்பார்கள். துடைப்பக் கட்டையால் அவருக்கு ஆசிர்வாதம் செய்வார்கள். அதை விட கழிவு பொருட்களையும் அதிலே கலந்து ஆசீர்வாதம் செய்து திருப்பி அனுப்புவார்கள் என்பது உறுதி.
எனவே குஷ்பு அவர்கள் பகிரங்கமாக தமிழினத்தின் முன் மண்டியிட்டு தான் கூறிய “தமிழ் ஆயுத போராட்ட அமைப்பை பயங்கரவாதிகள் என்ற கருத்தை மீளப்பெற வேண்டும். அதற்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையேல் நாங்கள் அவருடைய வாழ்க்கையை அல்லது வரலாற்றின் சில புள்ளிகளை தோலுரித்துக் காட்ட வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்படும். எனவே மற்றவர்களை கொச்சைப்படுத்தும் பொழுது தாங்கள் சுத்தமானவர்களாக இருக்க வேண்டும். எனவே அந்த பாதிப்பையும் அவர்கள் ஏற்க வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்படும். எனவே இந்த யாழ்ப்பாணம் வருகின்ற வருகையை இரத்து செய்ய வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.