பொருளாதார வீழ்ச்சியினால் பின்னடைந்து போயுள்ள எமது நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என்பதற்காகவே இவ்வரவு செலவு திட்டம் ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்டது என ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸின் உறுப்பினர் செயிட் அலி ஸாஹிர் மௌலானா எம்.பி. தெரிவித்துள்ளார்
ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவு திட்டத்தின் இன்றைய நாள் விவாதத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்
குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்
அரசியல் பாகுபாடு இன்றி இந்நாட்டை கட்டியெழுப்ப வேண்டும். ஆக்கபூர்வமாக சிந்திக்க வேண்டும். எமது நாடு கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள் இருந்த போது, அனைத்தும் அதள பாதாளத்தில் தள்ளப்பட்ட நேரத்தில் மக்கள் விரக்தியின் விளிம்பில் தள்ளப்பட்ட நேரத்தில், மக்களோடு மக்களாக களத்தில் நின்றவன் நான். அவர்களின் வலியை உணர்ந்தவன் நான். இந்த நாட்டின் விடிவுக்காய் நல்லதொரு மாற்றத்தை கொண்டு வர விரும்பியவன் நான். அனைவரின் உணர்வுகளை மதிப்பவன் நான்.
கடந்த அரசின் செயற்பாடு காரணமாக நாடு பொருளாதார பின்னடைவை எதிர்கொண்டது. இதற்கு காரணமானவர் யார்? இந்த நிலையில் ஜனாதிபதி அவர்களால் 2024ம் ஆண்டுக்குரிய வரவு செலவு திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. பொருளாதார வீழ்ச்சியினால் பின்னடைந்து போயுள்ள எமது நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என்பதற்காகவே இவ்வரவு செலவு ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்டது. இது ஜனாதிபதியின் சாமர்த்தியமான முன்னெடுப்பாகவே நான் பாக்கிறேன்.
மக்களின் முதுகின் மேல் அடுக்கடுக்காக வரி சுமைகளை சுமத்தி அன்றைய அரசியல்வாதிகள் நாட்டுக்கு வெளியே கறுப்பு பணத்தை சேர்த்தனர். இப்படியான ஊழல்வாதிகளை பாதுகாக்காமல் நாட்டின் முன்னேற்றத்திற்கு செயற்றப்பட வேண்டுமென நான் ஜனாதிபதியை கேட்டுக்கொள்கிறேன். பணவீக்கத்தினை குறைத்து, அவர்களின் வாழ்க்கை செலவை குறைத்து, அரசில் உள்ள ஊழல்களை களைய முன் வர வேண்டும். எல்லா துறையும் சீரழிந்து காணப்படுகிறது. பலவீனமாக காணப்படுகிறது. தான்தோன்றி தனமான செயற்பாடுகள் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அரசியல் அழுத்தம் காரணமாக மொத்த இயக்கமும் பலவீனப்பட்டு காணப்படுகிறது. இதனால் எதிர்காலம் கேள்விக்குரியாக உள்ளது. ஜனாதிபதி மக்களை மீட்டெடுக்க முன் வர வேண்டும். பிரச்சினைகளை தீர்க்க நல்லிணக்கம் கட்டியெழுப்பப்பட வேண்டும். என மேலும் தெரிவித்துள்ளார்.