இன்றையதினம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலை சந்தியில் இருந்து 100 மீற்றர்கள் தூரத்தில் உள்ள புதர் ஒன்றின் உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
குறித்த சடலத்தில் நீல நிற சேட்டும், நீலம் மற்றும் சாம்பல் நிற சாறமும் அணிந்தவாறு காணப்படுகிறது.
கடந்த 14ஆம் திகதி பொன்னாலை கிராம சேவகர் அலுவலகத்தை சேதப்படுத்தும் விதத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் செயற்படுகின்றார் என ஊர் மக்கள் கிராம சேவகருக்கு தெரியப்படுத்தினர். இதன்போது கூட்டம் ஒன்றில் இருந்த கிராம சேவகர் பொலிஸாருக்கு இது குறித்து தெரியப்படுத்தினார்.
இந்நிலையில் பொலிஸார், தாங்கள் அவரை அழைத்துச் சென்றதாக கிராம சேவகருக்கு தெரிவித்தனர். அந்த நபரின் புகைப்படம் ஊர் மக்கள் கிராம சேவகருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த புகைப்படத்தில் இருக்கின்ற நபரின் உடைகளும் சடலத்தில் இருக்கின்ற உடைகளும் ஒத்துப் போகின்றன.
ஊடகவியலாளர் ஒருவர் குறித்த பகுதிக்கு சென்று சடலத்தை புகைப்படம் மற்றும் காணொளி எடுத்தவேளை, அவரை காணொளி மற்றும் புகைப்படம் எடுக்க வேண்டாம் என பொலிசார் மிரட்டும் தொனியில் தடுத்தனர்.
குறித்த ஊடகவியலாளர் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, கடந்த 14ஆம் திகதி பொன்னாலை கிராம சேவகரின் அறிவித்தலின் பேரில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரை பொலிஸ் நிலையம் அழைத்து சென்றீர்களா? அவ்வாறு அழைத்துச் சென்றால் அவர் எங்கே? என வினவினார். அதற்கு “அது தொடர்பாக எதுவும் தெரியவில்லை” என குறித்த ஊடகவியலாளருக்கு பதில் வழங்கப்பட்டது.
பொலிஸார் ஊடகவியலாளரை காணொளி எடுக்க விடாது தடுத்தது, மற்றும் பொலிஸ் நிலையத்திற்கு தொடர்பு கொண்டு வினவியவேளை அது குறித்து தெரியாது என பதில் கூறியமை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.