நாடாளுமன்றத்திற்குள் ஏற்பட்ட குழப்ப நிலை காரணமாக நாடாளுமன்ற அமர்வுகள் ஐந்து நிமிடங்களுக்கு சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவினால் ஒத்திவைக்கப்பட்டது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உரையாற்றிக் கொண்டிருக்கும் போது இடையிட்ட அரச தரப்பு உறுப்பினர்கள் கடும் கூச்சலிட்டனர்.
இதன்போது, இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உள்ளிட்டோர் தனது இடத்தில் இருந்து எழுந்து சஜித் பிரேமதாசவின் இடத்திற்குச் சென்று குழப்பம் விளைவிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டனர்.
அதேசமயம், எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்களும் குறித்த இடத்தில் ஒன்று திரண்டதுடன் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டது.
இதன்போது, பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சக்கள் உள்ளிட்டோரே காரணம் என்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் கருத்து வெளியிட, எதிர்க்கட்சித் தலைவரின் பேச்சுக்கு ஆளும் கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனத்திற்கு அருகில் வந்து இடையூறு செய்ததன் காரணமாக 05 நிமிடங்களுக்கு சபை ஒத்திவைக்கப்பட்டது.
அதன்பின் சபை அமர்வு 30 நிமிடங்களுக்குப் பின்னர் ஆரம்பமானது.
இதன் போது சபைக்குள் கையடக்க தொலைபேசிகளைப் பயன்படுத்தி புகைப்படம், வீடியோ எடுத்தல் மற்றும் நேரலை ஒளிபரப்பு போன்றவற்றை தவிர்க்குமாறு சபாநாயகர் உத்தரவிட்டார்.
அத்தோடு பாராளுமன்ற ஒழுங்கு விதிகளை மீறி செயற்படுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் மேலும் தெரிவித்தார்.