சித்தங்கேணி இளைஞனின் மரணம்..!ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு…!samugammedia

வட்டுக்கோட்டைப் பொலிஸாரின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலால் இளைஞன் ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படும் நிலையில் மரணத்திற்கு காரணமாக இருந்த பொலிசாருக்கு உடனடியாக உரிய தண்டனை கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுக்காது போனால் ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவில் முறையிடுவோம் என ஐரோப்பா வாழ் சித்தங்கேணி மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த இளைஞனின் மரணம் குறித்தான கண்ணீர் அஞ்சலி மற்றும் கண்டன அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

சித்தங்கேணியைச் சேர்ந்த அமரர் நாகராசா அலெக்ஸின் பிரிவால் மீளாத் துயரில் உறைந்திருக்கும் குடும்பத்திற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கின்றோம். அன்னாரின் ஆத்மா சாந்திக்காக இறைவனை வேண்டுகின்றோம்.

பொலிசாரின் சித்திரவதையால் பலியான எங்கள் உயிர்தோழன் அலெக்சின் தீர்ப்பு என்ன? கொலை செய்த பொலிசாரின் இடமாற்றம் இவனின் உயிருக்கு ஈடாகுமா? சிறுநீரகம் செயலிழக்கும் நிலை வரும் வரைக்கும் கொடூர தாக்குதலை, கண்மூடித்தமான சித்திரவதையை செய்த பொலிஸாரின் அநீதியை தட்டிக் கேட்க எவரும் இல்லையா?

கொலை செய்யப்பட்ட எங்கள் ஊரைச் சேர்ந்த அலெக்சின் உயிரை மீட்டு தரமுடியுமா? கண் மூடித்தனமாக சித்திரவதை செய்த பொலிசாருக்கு என்ன தண்டனை? கொலை உண்ட எங்கள் ஊரைச் சேர்த்த அலெக்சின் வாக்குமூலத்தை கேட்ட பின்னரும் எதற்காக இந்த மௌனம்?

சட்டத்தை நிலை நாட்ட முடியாத இது என்ன நாடா? இல்லை சுடுகாடா?

அலெக்சின் மரணத்திற்கு காரணமான பொலிசாரை உடனடியாக சட்டதின் முன் நிறுத்தி அவர்களுக்கு உரிய தண்டனை கொடுக்காத காரணம் தான் என்ன?

வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இவ்விடயம் தெரியாமல் போனதா? இந்த கொடூரமான சம்பவத்திற்கும் அவருக்கும் சம்மந்தம் இல்லையா? உடனடியாக அவருக்கும் தண்டனை கொடுக்க ஏன் தாமதம்?

உண்மையான களவாளிகளை கண்டுபிடித்து எங்கள் அலெக்ஸ் நிரபராதி எனும் உண்மையினை அனைவருக்கும் அறியத்தர வேண்டும்.

மேலும் அலெக்சின் மரணத்திற்கு காரணமாக இருந்த பொலிசாருக்கு உடனடியாக உரிய தண்டனை கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுக்காது போனால் ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவிற்கு இவ்விடயத்தை உடனடியாக அறியப்படுத்தி, மேலதிக நடவடிக்கைகளை துரிதப்படுத்தி கொலையாளிகளுக்கு எதிராக உரிய நடவடிக்கைகளை எடுப்போம் – என்பதை உறுதியுடன் அறியத்தருகின்றோம் – என குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *