சமூக வலைத்தளங்களில் வெளியாகும் போலி விளம்பரங்கள்..! பொதுமக்களுக்கு பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள எச்சரிக்கை

வெளிநாட்டு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என சமூக வலைத்தளங்களில் வெளியாகும் போலி விளம்பரங்களில் சிக்கிக் கொள்ள வேண்டாம் என பொலிஸ் தலைமையகம் கோரிக்கை விடுத்துள்ளது.

சரியான முறையில் வெளிநாடு செல்வதன் மூலம் ஏற்படும் பிரச்சினைகளுக்கு மாத்திரம் இலங்கை அதிகாரிகளால் தலையீடு செய்ய முடியும் என பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

மியன்மாரில் சிக்கியுள்ள இலங்கையர்கள் தொடர்பில் கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மியான்மாரில் இலங்கையர்கள் குழுவொன்று இணைய அடிமைத்தனம் என்ற அடிப்படையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் மனித கடத்தல் மற்றும் கடல்சார் குற்றப்பிரிவு என்பன விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.

கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் மூன்று இலங்கையர்கள் மற்றும் சீன பிரஜை ஒருவர் உட்பட 4 பேரிடம் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

மியன்மாரின் பயங்கரவாத குழு ஒன்றின் முகாமில் 56 இலங்கையர்கள் வலுக்கட்டாயமாக தடுத்து வைக்கப்பட்டு இணைய அடிமைகளாக பணிபுரிந்து வருகின்றனர்.

2022ஆம் ஆண்டு முதல் இலங்கை இளைஞர்கள் இந்த அவலத்தை எதிர்நோக்கி வருவதாகவும் வெளிவிவகார அமைச்சு இதற்கு முன்னர் 32 இலங்கையர்களை பல சந்தர்ப்பங்களில் மீட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியா, பூட்டான், பங்களாதேஷ், மியான்மார், தாய்லாந்து மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுடன் இணைந்து சிறைபிடிக்கப்பட்ட இலங்கையர்களை மீண்டும் தாயகத்திற்கு அழைத்து வருவதற்கான செயற்பாடுகள் இடம்பெறுவதாக பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *