யாழில் டெங்கை முடிவுக்கு கொண்டு வர சகல தரப்பும் பொறுப்புணர்வுடன் செயல் படுங்கள் – அரச அதிபர் கோரிக்கை…!samugammedia

யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிகரிக்கும் டெங்கு நோய் தாக்கத்தைப் பார்க்கின்றபோது மிக வேதனையாக இருக்கின்றது என்று தெரிவித்த மாவட்ட அரச அதிபர் அ.சிவபாலசுந்தரன், இதனைக் கட்டுப்படுத்துவதற்கு அனைவரும் பொறுப்புணர்ந்து செயற்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற 19 ஆவது தேசிய பாதுகாப்பு தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, அனர்த்தங்களை நினைவுகூர்ந்து உயிரிழந்தவர்களை அஞ்சலிக்கின்ற ஆழிப்பேரலை போன்ற நினைவு தினங்கள் வருகின்ற போதெல்லாம் கண்கள் கலங்கும். அனர்த்தங்களால் பல்வேறு தரப்பினரும் பல வழிகளிலும் பாதிக்கப்படுகின்றனர். ஆகவே, அனர்த்தங்கள் ஏற்படாமல் தடுக்க வேண்டிய அதேநேரத்தில் அனர்த்தங்களின்போது எவ்வாறு பாதுகாத்துக் கொள்வதும் முக்கியம்.

குறிப்பாக எமது மாவட்டத்தில் தற்போது டெங்கு நோய் அனர்த்தம் ஏற்பட்டிருக்கின்றது. இதனாலும் கூடப் பாதிப்புக்கள் ஏற்படுகின்ற அதேவேளையில் இழப்புக்களும் ஏற்படுகின்றன.  இந்த டெங்கு நிலைமைகள் மேலும் தீவிரமாகாமல் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். இதன் தாக்கம் தொடர்பில் மக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

டெங்கு தாக்கம் உள்ளிட்ட அனர்த்தங்களின்போது எவ்வளவு அக்கறையாக இருக்கின்றோம் என்பது கேள்விக்குறியாக இருக்கின்றது. தனிப்பட்ட முறையில் கூட இதற்கு நாம் எல்லோரும் பொறுப்பு. இந்த நிலைமைகளைப் பார்க்கின்ற போது அரச அதிபரான எனக்கு மிக வேதனையாக உள்ளது.

ஒவ்வொருவரும் எப்போதும் சமூகம் சூழல் சார்ந்த அக்கறையோடு இருக்க வேண்டும். ஆகையினால் டெங்கு அனர்த்தப் பாதிப்பில் இருந்து எமது சமூகத்தை மீட்டெடுக்க வேண்டும். முதலில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியம். அனைவரும் பொறுப்புணர்ந்து செயற்பட வேண்டும். – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *