இந்திய…

இந்திய அணிக்கெதிரான 3 ஆவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி ஒரு இன்னிங்ஸுடன் 76 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

இந்த வெற்றியுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் சமநிலையில் உள்ளன.

லீட்ஸ் மைதானத்தில் கடந்த புதன்கிழமை ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்தியா அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியக் கிரிக்கெட் அணி, 78 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, ரோஹித் சர்மா 19 ஓட்டங்களையும் ரஹானே 18 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில், ஜேம்ஸ் எண்டர்சன் மற்றும் கிரைஜ் ஓவர்டொன் ஆகியோர் 3 விக்கெட்டுகளையும் ரொபின்சன் மற்றும் சேம் கர்ரன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, 432 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இங்கிலாந்து அணி சார்பில், அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஜோ ரூட் 121 ஓட்டங்களையும் டாவிட் மாலன் 70 ஓட்டங்களையும் ஹசீப் ஹமட் 68 ஓட்டங்களையும் ரொறி பர்ன்ஸ் 61 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இந்தியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், மொஹமட் ஷமி 4 விக்கெட்டுகளையும் மொஹமட் சிராஜ், ஜஸ்பிரிட் பும்ரா மற்றும் ரவிந்தீர ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 354 ஓட்டங்கள் பின்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்தியா அணி, மூன்றாம்நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 215 ஓட்டங்களை பெற்றது.

இதில் கே.எல். ராகுல் 8 ஓட்டங்களுடனும் ரோஹித் சர்மா 59 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், ஒல்லி ரொபின்சன் மற்றும் கிரைஜ் ஓவர்டொன் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.

இதனையடுத்து, 8 விக்கெட்டுகள் வசமுள்ள நிலையில், போட்டியின் நான்காவது நாளை இந்தியா நேற்று தொடங்கியது.

எனினும் சேத்தேஸ்வர் புஜார 91 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இதனையடுத்து வந்த அணித்தலைவர் விராட் கோஹ்லி 55 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து வந்த இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர்கள் சொற்ப ஓட்டங்களைப்பெறவே, 278 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்த இந்தியா, 76 ஓட்டங்களுடன் இன்னிங்ஸ் தோல்வியைத் தழுவியது.

பந்துவீச்சில் ஒல்லிய் ரொபின்சன் 5 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இவ்விரு அணிகளுக்கிடையிலான 4ஆவது போட்டி அடுத்த மாதம் இரண்டாம் திகதி ஓவல் மைதானத்தில் ஆரம்பமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *