புத்தளம் பகுதியில் மதகுக்கு கீழ் இருந்து ஒருவர் சடலமாக மீட்பு..!samugammedia

புத்தளம், கரம்பை – உடப்பு வீதியின் காமன்ட் வத்தைக்கு செல்லும்  வீதியில் உள்ள மதகுக்கு கீழ் இருந்து குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கரம்பை , தேத்தாப்பொல காமன்ட் வத்தை பகுதியைச் சேர்ந்த உதயகுமார் எனும் 55 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக நுரைச்சோலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலமாக மீட்கப்பட்ட நபரின் மனைவி தொழில் நிமித்தம் வெளிநாட்டில் தொழில் புரிந்து வரும் நிலையில், இரண்டு பிள்ளைகளையும் குறித்த நபரே பராமரித்து வந்துள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், கடந்த முதலாம் திகதி குறித்த நபர், வீட்டில் இருந்து வெளியேறிச் சென்ற நிலையில் காணாமல் போயுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதுபற்றி குடும்பத்தினர் பொலிஸில் முறைப்பாடு செய்த நிலையில், குறித்த நபர் இன்று பிற்பகல் வடிகானுக்குள் இருந்து  சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மதகுக்கு கீழ் சடலமொன்று கிடப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு சென்ற நுரைச்சோலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர். அத்துடன், புத்தளம் தடயவியல் பொலிஸாரும் சம்பவ இடத்தில் விசாரணைகளை மேற்கொண்டனர்.

இதன்போது, சம்பவ இடத்திற்கு வருகை தந்த புத்தளம் மாவட்ட பதில் நீதவான் எம்.எம்.இக்பால், சம்பவ இடத்தில் நீதிவான் விசாரணையை முன்னெடுத்ததுடன், சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு எடுத்து செல்லுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். சடலம் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்ட நபர் மது அருந்தும் பழக்கமுடையவர் எனவும் மதகுக்கு மேல் இருந்து மது அருந்திய நிலையில் இவ்வாறு மதகுக்கு கீழ் செல்லும் நீருக்குள் வீழ்ந்து உயிரிழந்திருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக பொலிஸார் குறிப்பிட்டனர். இந்த சம்வம் தொடர்பில் நுரைச்சோலை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் டபிள்யூ.எஸ்.பிரேமசிறி தலைமையிலான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply