
சைவ ஆதீனங்களின் அருளாசியோடு தமிழ்ச் சைவப் பேரவையின் வழிகாட்டலுடன், சைவ மகா சபை, சைவ நெறிக் கூடம் உள்ளிட்ட அமைப்புகளின் உறுதுணையுடன் சிவ தொண்டர், சிவமங்கையரின் அர்ப்பணிப்புமிக்க பங்களிப்புடன் சிவவாரமும் சைவத்தமிழ் எழுச்சி யாத்திரை முன்னெடுக்கப்படவுள்ளது என தமிழ்ச் சைவப் பேரவை ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார்.
கடந்த இரு தசாப்தமாக சிறியளவில் சிவத்தமிழ் மானிட விடியற்கழகம், சைவ மகா சபை போன்ற அமைப்புக்களின் எண்ணக்கருவில் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்ட சிவ வாரம் தமிழ்ச் சைவப் பேரவையின் ஒருங்கிணைப்பில் இம்முறை நாடாளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ளது.
1.அறநெறிப் பாடசாலைகளை வலுவூட்டுதல், இல்லாத பிரதேசங்களில் உருவாக்குதல் சைவத் தமிழ் நூல்களை அச்சிட்டு மற்றும் சேகரித்து வழங்கல்.
2.இரத்ததானம் மற்றும் சிரமதானங்களை இவ்வாரத்தில் பல இடங்களில் மேற்கொள்ளல்.
3.ஆலயங்கள் தோறும் அறப்பணி உண்டியல்கள், நிதியங்கள், இல்லங்கள் தோறும் பிடியரிசித் திட்டம் என்பவற்றை வலுப்படுத்தலும் மனிதநேய உதவிகளை நலிவுற்ற எம் சகோதரர்களை இனங்கண்டு வழங்க ஊக்கப்படுத்தலும்.
4.நந்தி கொடிகளை ஆலயங்கள், பொது இடங்கள், அலுவலகங்கள், வீடுகள், வாகனங்களில் காட்சிப்படுத்த ஊக்கம் அளித்து சைவததமிழ் எழுச்சியை ஏற்படுத்தல்.
5.சிவராத்திரி அன்று சிறார்களிற்கும் பெரியவர்களுக்கும் நாடளாவிய ரீதியில் சிவ தீட்சை வழங்கவும் உருத்திராக்கம் அணிவிக்கவும் ஏற்பாடுகளை மேற்கொள்ளல்.
இந்த வாரத்தில் 5 சிவப் பிராந்தியங்களும் மேலுள்ள 5 செயற்றிட்டங்களில் ஒன்றையோ பலவற்றையோ இவ்வாரத்தில் முன்னெடுக்கவுள்ளது.
இறுதியாக மகா சிவராத்திரி அன்று ஒரு தொகுதி சிவதொண்டர்கள் சிவபூமியின் அனைத்து சிவ பிராந்தியங்களில் இருந்தும் மன்னார் திருக்கேதீச்சரத்திற்கு மோட்டார் சைக்களில் நந்திக் கொடிகளுடன் சைவத்தமிழ் ஆன்மீக எழுச்சி யாத்திரையை மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளனர்.
மேற்படி செயற்றிட்டங்களிற்கு தமிழ்ச் சைவ அன்பர்கள் அனைவரது பேராதரவை இந்த சிவ வாரத்தில் அன்போடு வேண்டி நிற்கின்றோம்.- என்றுள்ளது.